புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையில் பெலகாவி மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதியை இரு மாநிலங்களும் உரிமை கோரி வருகின்றன. கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், மீண்டும் எல்லைப் பிரச்னை தலைதூக்கியுள்ளது. இருமாநிலங்களிலும் அரசியல் ரீதியான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மேற்கண்ட இரு மாநிலங்களிலும் பாஜ மற்றும் பாஜ கூட்டணி ஆட்சி நடப்பதால், இப்பிரச்னையை கையாள்வதில் பாஜ தலைமை மிகவும் எச்சரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், கர்நாடகா – மகாராஷ்டிரா எல்ைல பிரச்னை தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, இரு மாநில எல்லை பிரச்னையை தெருவில் இறங்கி போராடுவதால் தீர்க்க முடியாது. சட்டரீதியாகத்தான் தீர்க்க முடியும் என்று அமித்ஷா ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் பட்நவிஸ், கர்நாடக உள்துறை அமைச்சர் அரகஞானேந்திரா இருந்தனர். அப்போது, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரு மாநில எல்லை பிரச்னைக்கு சுமுக தீர்வு காண இருமாநிலமும் தலா 3 பேர் கொண்ட அமைச்சர் குழுவை அமைக்க வேண்டும். இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்’.