திருவனந்தபுரம்: சபரி மலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து. அவர்கள் கொண்டு வரும் நெகிழி உள்ளிட்ட கழிவு பொருள்களும் உடனுக்குடன் அப்புறப்படுத்தபட்டு வருகின்றன. சபரிமலையின் சுற்றுப்புற சுகாதார துறை பாதுகாக்கும் நோக்கில் ‘புண்ணியம் பூங்காவனம்’ என்ற தூய்மை பணிக்கான திட்டம் 12 வது ஆண்டாக இந்த ஆண்டும் அமலில் உள்ளது.
இதன் அடிப்படையில் நடந்த தூய்மை பணியில் காவல் துறை, தேசிய பேரிடர் மீட்பு படை, கலால், வனம், தீயணைப்பு படை மற்றும் பல்வேறு துறையினர் பங்கேற்றனர். சபரிமலையில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது. இந்த மண்டல காலத்தில் நடை திறந்த 25 நாட்களில் கோயிலின் மொத்த வருமானம் ரூ.150 கோடியை தாண்டி உள்ளது. இதில் அப்பம், அரவணை பாயசம் விற்பனை மூலம் மட்டும் ரூ.70 கோடி கிடைத்து உள்ளது. இதுவரை 70 லட்சம் டின் அரவணையும், 12.5 லட்சம் பாக்கெட்டுகள் அப்பமும் விற்பனையாகி உள்ளது.
இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் நெகிழி பொருள்கள் ஆங்காங்கே வீசப்படுகிறது. இதை தொடர்ந்து ‘புண்ணியம் பூங்காவனம்’ திட்டபடி நெகிழி உள்ளிட்ட பொருள்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படுகிறது.