ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த புகழேந்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அலோபதி மற்றும் பல் மருத்துவர்கள் போன்று சித்த மருத்துவர்கள் பதவி உயர்வு மற்றும் பலன்களை வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “தமிழக சுகாதாரத் துறையின் கீழ் உள்ள அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அரசாணைப்படி அலோபதி மற்றும் பல் மருத்துவர்கள் போல சித்தர் மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு மற்றும் பலன்களை வழங்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த ஜி.ஆர் சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு “மனுதாரர்கள் சித்த மருத்துவப் பிரிவு அரசு மருத்துவர்கள் தான். அவர்களும் அனைத்து பலன்களையும் பெற தகுதியானவர்கள் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து ஏற்கனவே மனு அளித்துள்ளனர்.
டாக்டர்கள் பதவி உயர்வு அரசாணை நேரடியாக மனுதாரருக்கு பொருந்தாது என்றாலும் இவர்களும் பலனடையும் வகையில் உரிய செயல் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே சுகாதாரத் துறை செயலாளர் ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும். அந்த கூட்டத்திற்கு மனுதாரர்களையும் அழைக்கலாம். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சித்த மருத்துவ டாக்டர்கள் பயன்பெறும் வகையில் உரிய செயல் திட்டத்தை அடுத்த நான்கு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்” என உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.