காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் புகழ்பெற்ற சனிபகவான் கோயிலான தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இந்நிலையில் பக்தர்களை கவரும் வகையில் கோயில் அருகில் சுற்றுலாத்துறை சார்பில் ஆன்மீக பூங்கா கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடந்து வந்தது.
இதைதொடர்ந்து ஆன்மிக பூங்கா திறப்பு விழா நேற்று நடந்தது. புதுச்சேரியில் நடந்த விழாவில் பங்கேற்ற ஒன்றிய சுற்றுலா துறை அமைச்சர் கிஷான் ரெட்டி நேற்று காணொளி மூலம் காரைக்கால் ஆன்மீக பூங்காவை திறந்து வைத்தார். விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, காரைக்கால் கலெக்டர் முகமது மன்சூர் பங்கேற்றனர்.
இந்த ஆன்மிக பூங்காவானது ரூ.7.20 கோடியில் 21,897 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்மிக பூங்காவில் 9 நவக்கிரக மூர்த்திகளின் சன்னதிகள், தியான மண்டபம், தீர்த்த குளங்கள், மூலிகைச்செடி வனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், ஆன்மீகவாதிகளை கவரும் வகையில் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.