பாட்னா: பிஹார் மாநில சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அராரியா தொகுதியைச் சேர்ந்த அவிதுர் ரகுமான் (55) மட்டும் காலில் வலி இருப்பதாக கூறி எழுந்து நிற்கவில்லை.
அதன் பிறகு, சபையை ஒத்திவைப்பதற்கு முன்பாக, இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டபோது மட்டும் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ரகுமான் எழுந்து நின்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேசிய கீதத்தை வேண்டுமென்றே ரகுமான் அவமரியாதை செய்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர். இதுகுறித்து பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான நீரஜ் சிங் பப்லு கூறும்போது, ‘‘தேசிய கீதம் பாடப்படும்போது காலில் ஏற்பட்ட அசவுகரியம் பின்பு சில நிமிடங்களில் மட்டும் எப்படி மாயமாய் மறைந்துபோனது. அவர் வேண்டுமென்றே தேசிய கீதத்தை அவமரியாதை செய்தது வெளிப்படையாக தெரிகிறது. அவரின் இந்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது’’ என்றார்.