நாமக்கல்லில் பரபரப்பு; வருமானவரித்துறை அதிகாரிகளின் காரை நிறுத்தி போலீசார் விசாரணை: முகவரி மாறி அலுவலர்கள் சென்றதால் குழப்பம்

நாமக்கல்: நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டுக்கு நேற்றிரவு சேலத்தில் இருந்து வருமானவரி துறை அதிகாரிகள் 3 பேர் காரில் வந்துள்ளனர். பின்னர் அந்த தொழில் அதிபரின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினர். வெளியே வந்த அவரது மனைவி, ‘கணவர் வீட்டில் இல்லை’ என கூறியுள்ளார். இதையடுத்து வருமானவரி துறை அதிகாரிகள், ‘விசாரணைக்கு வந்துள்ளோம்’ என்று கூறியுள்ளனர்.

தனது கணவரிடம் போனில் பேசிவிட்டு வருவதாக கூறிவிட்டு அந்த பெண்மணி வீட்டுக்குள் சென்றார். சில நிமிடத்தில் வீட்டின் கேட் அருகே அந்த பெண் வந்த போது, அங்கிருந்த வருமானவரி துறை அதிகாரிகளை காணவில்லை. காரையும் காணவில்லை. அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது உறவினர்கள் மூலம் நாமக்கல் போலீசாரை தொடர்பு கொண்டு விபரம் கூறினார்.

இதையடுத்து அங்கு நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் ஏராளமான போலீசார் வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வந்தவர்கள், போலி வருமானவரித்துறை அதிகாரிகள் என பேச்சு எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் வந்த காரின் பதிவு எண்ணை கண்டுபிடிக்க அந்த வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் காரின் பதிவு எண் தெரிந்தது. அந்த காரை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. இரவு 11 மணியளவில், வருமானவரித்துறை அதிகாரிகள் வந்த காரை ஆண்டகளூர் கேட் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு நாமக்கல்லில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழுவினர் சென்று விசாரணை நடத்தினர். காரில் 3 பேர் இருந்தனர். அவர்கள் சேலம் வருமானவரி துறை அலுவலர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் நாமக்கல்லில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டுக்கு ரகசிய விசாரணைக்காக வந்துள்ளனர். வந்த இடத்தில் முகவரி மாறி வேறு வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளனர். பின்னர் தவறை உணர்ந்து சென்று விட்டனர்.

அவர்கள் தேடி வந்த தொழிலதிபரின் வீட்டுக்கு சென்று விசாரித்து விட்டு சேலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது தான் போலீசாரின் வாகன சோதனையில் வருமானவரித்துறை அதிகாரிகள் வந்த காரை போலீசார் நிறுத்தி விசாரித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.