சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இன்று இணையும் உதயநிதி ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்காக ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
இதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில், முதல்வர் முன்னிலையில், அமைச்சராக உதயநிதி பதவியேற்கிறார். அவருக்கு, பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைக்கிறார்.
என்ன துறை? பதவியேற்பு விழா முடிந்ததும், அங்கிருந்து தலைமைச் செயலகம் வரும் உதயநிதி, காலை 10.15 மணிக்கு அவரது அறையில், அமைச்சராக பொறுப்பேற்கிறார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இன்றே சில நலத்திட்டங்களுக்கு அவர் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.
இதுதவிர, அமைச்சரவையில் சில மூத்த அமைச்சர்களுக்கு துறை பொறுப்புகள் மாற்றம் இருக்கும் என்றாலும் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. குறிப்பாக அமைச்சர்கள் மெய்யநாதன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரின் கூடுதல் பொறுப்புகள் மாற்றி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
அமைச்சர்கள், அதிகாரிகள் வருகை: பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வெறும் 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் விழாவிற்கு வரவில்லை. அமைச்சர்கள், கூட்டணிக் கட்சிப் பிரமுகர்கள், அதிகாரிகள் வருகை தந்துவருகின்றனார். மேடையில் ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், அமைச்சராக பதவியேற்கவுள்ள உதயநிதி என 4 பேருக்கு மட்டுமே இருக்கை போடப்பட்டுள்ளது.