கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜிபு. இவர் மகன் ஆதில். ஏழாம் வகுப்பு படிக்கும் இவர், கடந்த மே மாதம் குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.
இவர் மே 6-ந் தேதி வெளியில் விளையாட சென்றுள்ளார். ஆனால், இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு மணத்திட்டை பகுதியில் உள்ள ஓரு குளத்தில் ஆதில் பிணமாக மிதந்துள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். அதன் படி, அந்த சிறுவன் எப்படி இறந்தான்? என்பது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு தாமதமானதால், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு கேரள முதலமைச்சர் பிணராய் விஜயனுக்கு, சிறுவனின் தந்தை நிஜிபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து, கேரளா முதலமைச்சர் பிணராயி விஜயன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை விரைந்து கைது செய்யவேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் முகமது ஆதில் மரணம் வழக்கு விசாரணையை சி.பி.சிஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.