
வாரிசு படப்பிடிப்பை முடித்த கணேஷ் வெங்கட்ராம்
நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்தில், தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்துள்ள படம் வாரிசு. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இருந்தும் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். அந்தவகையில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தற்போது தான், வாரிசு படத்தில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார் கணேஷ் வெங்கட்ராம். படப்பிடிப்பு முடிவடைந்ததும் இயக்குனர் வம்சி உடன் எடுத்துக்கொண்ட செல்பியை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள கணேஷ் வெங்கட்ராம், இந்த படத்தில் நடித்தது குறித்து கூறும்போது, “இயக்குனர் வம்சியின் சினிமா மீதான தாகத்தையும் அர்ப்பணிப்பையும் கண்டு பெருமைப்படுகிறேன். அவருடன் பணியாற்றியது மிக அற்புதமான அனுபவம். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் விஜய்யை அவர் ஸ்டைலிஷாக காட்டி இருக்கும் விதத்தையும் பார்த்து வியந்தேன். விரைவில் பெரிய திரையில் சந்திக்கலாம்” என்று கூறியுள்ளார்