விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்மரங்களை பாதுகாக்க கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், விழுப்புரம் கலெக்டர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் ஆகியோரிடம் அளித்துள்ள மனு: விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம்  திருவக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கல்மரங்கள் காணப்படுகின்றன. இந்தத் தொல்லுயிர் எச்சங்கள் 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.

1,781ல் ஐரோப்பிய விஞ்ஞானி சோனராட் என்பவரால் கண்டறியப்பட்டவை. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் திருவக்கரை பகுதியில் மட்டுமே இப்படியான கல்மரங்கள் கிடைக்கின்றன. அறிவியல் அதிசயம் என உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்களால் திருவக்கரை கல்மரங்கள் கொண்டாடப்படுவது, விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமைக்குரியதாகும்.
       
இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்மரங்களைப் பாதுகாக்க, திருவக்கரையில் மத்திய அரசின் சுரங்கத்துறை சார்பில் தேசிய கல்மரப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், திருவக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சிதைந்து காணப்படும் கல்மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்பகுதியில் உள்ள செம்மண் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என கடந்த 2019ஆம் ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருவக்கரையில் தற்போது மாநில அரசின் சார்பில் புவியியல் பூங்கா கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

ஆனாலும், திருவக்கரையைச் சுற்றியுள்ள கடகம்பட்டு, தொள்ளாமூர், கொண்டலாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் செம்மண் குவாரிகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. அவற்றின் மூலமாக செம்மண் மட்டுமல்லாது கல்மரங்களும் சுரண்டப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. இவை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தற்போது மேற்பரப்பிலேயே காணப்படும் கல்மரங்களைச் சேகரித்து, புதிதாக அமைக்கப்பட்டு வரும் புவியியல் பூங்கா வளாகத்தில் வைக்கலாம். மேலும், திருவக்கரைப் பகுதியில் இயங்கி வரும் செம்மண் குவாரிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.