கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு உகந்த மாதம். நவம்பர் 16-ஆம் தேதி கார்த்திகை பிறந்தது. இதையடுத்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் விதமாக பலரும் 48 நாட்கள் நோன்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நாட்களில் பெரும்பாலும் ஐயப்பனுக்கு பஜனைகள் பாடப்படும். வழக்கமாக பாடப்படும் ஐயப்ப பாடல்களையும் அவற்றின் பொருளையும் பின்வருமாறு காணலாம்.

1) “ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே”
இந்த பாடல் “சாஸ்தா ஸ்துதி கதம்பம் ” என்னும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. யேசுதாஸ் பாடிய இந்த பாடல் 1975 – இல் வெளியானது. இது பெரும்பாலும், சபரிமலையில் ஒவ்வொரு நாளும் ஐயப்பன் கோயில் நடை சாத்தப்படும் போது ஒலிப்பரப்பப்படும் பாடல் ஆகும். ஐயப்பனுக்கு பாடும் தாலாட்டாக இந்த பாடல் கருதப்படுகிறது. இந்த பாடல் வரிகளின் விளக்கமானது:
“இந்த உலகத்தை இயக்குபவரான திருமாலின் ஆசிகளைப் பெற்றவரும் , அவரின் ஒரு சாரமாக விளங்குபவருமானவரே, உமது பாதங்களை வணங்குகிறோம். தீயசிந்தனைகளை அழித்து இந்த உலகத்தை ஆள்பவரே , சிவன் மற்றும் திருமாலின் மகனே உன்னை சரணடைந்தோம்”, என்பதே ஆகும்.
2) “வட்ட நல்ல வட்ட நல்ல பொட்டு வச்சு
வடிவழகா இருப்பவனே
வரிப்புலி வாகனனே ஐயப்பா
வந்து உன்ன பாக்க வாரோம் ஐயப்பா”
இந்த பாடல் வரிகளைப் பாடியவர் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் . இது சபரிமலை செல்லும் பக்தர்களின் வழிநடைப் பாடலாகும். இந்த வரிகளின் விளக்கம் :
“வட்ட வடிவான பொட்டு வைத்து சபரிமலையில் வீற்றிருப்போனே, வரிகளை உடைய புலியை வாகனமாக கொண்டவனே, உன்னை காண உன் பக்தர்களாகிய நாங்கள் வருகிறோம்”, என்பதே ஆகும்.
3)”இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்”.
“பள்ளிக்கட்டு சபரிமலை ” எனத் தொடரும் இந்த பாடலின் வரிகள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம். இந்த பாடலை வீரமணி ராஜூ அவர்களால் பாடப்பட்டு 1988-இல் வெளியிடப்பட்டது. இந்த பாடல் வரிகளின் விளக்கம் :
” இருமுடிகளையும் (முன்முடியில் நெய்த்தேங்காய், ஐயப்ப நிவேதன பொருட்களான அவல், பொறி, பூஜை பொருட்களான விபூதி, குங்குமம், ஊதுபத்தி, பன்னீர் ஆகியவை இருக்கும். பின் முடியில் அரிசி மற்றும் சமையல் பொருட்கள் இருக்கும். ) தாங்கி ஒரு மனதாக சபரிமலையில் குருவாக வீற்றிருக்கும் உன்னை காண வந்தோம். என்னுள் இருக்கும் இருவினைகளையும் தீர்ப்பவனே , எமனையும் வெல்பவனே, உன் திருவடிகளை காண வந்தோம்”, என்பதே ஆகும்.

4) ” திருமார்பில் மணிமாலை கொஞ்சும்
நம் பெருமானைக் கண்டாலே – நம்
குருநாதன் திருவடியில் தஞ்சம்
காந்தமலை தன்னிலே ஒளியானவன்
ஓமென்னும் சொல்லுக்கு ஒலியானவன்
தேனிலும் நெய்யிலும் குளிப்பானவன்
தேனான செந்தமிழின் இசையானவன்”.
இது ஐயப்பனுக்கு பாடும் துதிப்பாடல் ஆகும். இந்த பாடல் வரிகளின் விளக்கம் :
“அவனை துதிக்க துதிக்க தேனான செந்தமிழ் போன்று இசையாய் ஒலிப்பான். அவன் இனிப்பான தேனிலும் மணம் பொருந்திய நெய்யிலும் குளிப்பவன். ‘ஓம்’ என்ற சொல்லுக்கு ஒலியாக திகழ்பவன். காந்தமான சபரிமலைக்கே ஒளியாக திகழ்பவன். மணிமாலைகளை திருமார்பில் அணிந்தவன். இத்தைகய பெருமைகளைக் கொண்ட அவனைக் கண்டாலே, குருநாதனாம் அவனது திருவடிகளில் சரணடைவோம்” என்பதே ஆகும்.
5)”அம்பும் வில்லும் கையிலேந்தி சுவாமி வருகிறார்
எம்பெருமான் துள்ளி துள்ளி ஆடி வருகிறார்
துன்பமெல்லாம் தீர்த்திடவே பவனி வருகிறார்
இன்பமோடு கும்பிடுவோம் சரணம் ஐயப்பா”.
இது சபரிமலையில் பவனி வரும் ஐயப்பனுக்கு பாடப்படும் துதிப்பாடல் ஆகும். இந்த பாடல் வரிகளின் விளக்கம் :
“காட்டினில் காவலரோடு, வரிகளை உடையே புலியின் மீது ஏறி, அம்பும் வில்லும் கையில் ஏந்தி, நம் துன்பம் தீர்க்கும் பொருட்டு, நம்மை காண பவனி வரும் அவனை இன்பம் பொங்க கும்பிடுவோம்”, என்பதே ஆகும்.
6)”சைவம் வைணவம் ஒன்று திரண்டு
தவம் புரியும் இடம் சபரிமலை!
தவறி விழுந்த மனிதனை எல்லாம்
தழுவிக் கொள்வது சபரிமலை!”
இது ஐயப்பனுக்கு பாடப்படும் பஜனை ஆகும். இந்த பாடல் வரிகளின் விளக்கம் :
” இங்கு சைவம் என்பது சிவனை குறிக்கும். வைணவம் என்பது திருமாலை குறிக்கும். சிவனுக்கும், திருமாலின் அவதாரமான மோகினி என்னும் பெண்ணுக்கும் பிறந்தவரே ஐயப்பன். ஆகவே சைவமும் வைணவமும் இணைந்து தவம் புரியும் இடமே சபரிமலை. பாவ அழுக்கில் தவறி விழுந்த மாந்தரை எல்லாம் தழுவி அணைத்து கொள்ளும் இடம் தான் சபரிமலை “, என்பதே ஆகும்.

7)”கார்த்திகை அதிகாலை நீராடி கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி
கண்களை மூடி உன் போவிலே இன்னிசை பாடுமென் நாவினிலே
ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்
வரமொன்று தருவாயோ ஐயப்பனே”.
இந்த பாடல் வரிகள் கார்த்திகை மாத அதிகாலைகளில் ஐயப்ப வீடுகளில் பெரும்பாலும் ஒலிக்கும். பக்தர்கள் ஐயப்பனின் தரிசனம் காண காத்திருக்கும் அந்ந நோன்பு நாட்களில் பாடப்படும் அதிகாலை பஜனை.
இந்த பாடல் வரிகளின் விளக்கம் : ” கார்த்திகை மாதம் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே நீராடி, தெய்வமாம் ஐயப்பனாகிய உன் பெயரை தினமும் பாடி, என் கண்களை மூடி, உன் நாமத்தை என் நாவால் இன்னிசையாக பாடிடுவேன். சிவனுக்கும் திருமாலுக்கும் மகனானவனே, உன்னை பாடும் வரத்தை எனக்கு தருவாயா “, என்பதே இதன் அர்த்தம் ஆகும்.
8)”துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்
தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம் (துளசிமணி மாலை)
பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலே
பரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று”.
சபரிமலை ஏறும் ஐயப்ப பக்தர்களின் வழிநடைப் பாடலாக விளங்கும் இப்பாடலின் அர்த்தம் :
“பனி சூழ்ந்த சபரிமலையின் உச்சியில் பதினெட்டாம் படியில் அன்பு கமழ அமைந்திருக்கும் ஐயப்பனின் திருவடியைக் கண்டு சரணடைய, தூய இதயம் படைத்த ஐயப்பனின் தரிசனம் காணக்கிடைக்க துளசிமாலையை அணிந்து செல்வோம்”, என்பதே ஆகும்.
9)”பொய்யின்றி மெய்யோடு
நெய்கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்.- சபரியில்
ஐயனை நீ காணலாம்”
இது ஐயப்பனுக்காக பாடப்படும் பக்தி பஜனை பாடல். இந்த பாடல் வரிகளின் விளக்கம் :
“உனக்குள் இருக்கும் எல்லா பொய்மைகளையும் களைந்து உண்மையான, களங்கமில்லாத நறுமணம் பொருந்திய நெய்யின் தன்மையுடையச் சுத்த இதயத்துடன் சபரிமலைக்கு சென்றால், ஐயப்பனை நீ காணலாம்”, என்பதே இதன் பொருளாகும்.

10) “தேடுகின்ற கண்களுக்கு ஓடி வரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி
வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி (தேடு)”.
இது ஐயப்பனின் அருள் வேண்டி பக்தர்கள் பாடும் பாமாலை. இந்த பாடல் வரிகளின் விளக்கம் :
“ஐயப்பன் – அவன் அருள் வேண்டி அவன் சந்நிதியில் ஓடி வந்து, அவனைத் தேடும் கண்களுக்கு காட்சி அளிப்பவன். நறுமணம் பொருந்திய நெய்யினால் ஏற்றப்படும் தீபங்களின் ஒளிக்கு நடுவே குடியிருப்பவன். வறுமையினால் வாடும் ஏழை எளியவர்களின் துயர் நீக்குகிறவன். நெஞ்சில் வஞ்சகமில்லாமல் அவனைக் காணச் செல்லும் நல்லவர்களுக்கு அருள் புரிபவன். இத்தகைய சிறப்புகளை வாய்ந்த ஐயப்பனே, இன்னும் அருள்புரிவாயாக! “, என்பதே இதன் பொருளாகும்.