மெஸ்ஸியின் புதிய சாதனை:
உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் அர்ஜெண்டினா அணியும் குரோஷியா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். மற்றொரு கோலுக்கு அசிஸ்ட் செய்தார். இதன்மூலம் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். இந்த 2022 உலகக் கோப்பை தொடரில், மெஸ்ஸி 4வது முறையாக ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில், எந்த ஒரு வீரரும் செய்யாத சாதனையைப் படைத்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் இதுவரை 5 கோல்கள் அடித்து, 3 அசிஸ்ட்களையும் செய்துள்ளார். இதன் மூலம் கோல்டன் பூட் வெல்லக்கூடிய வீரர்களின் பட்டியலில் மெஸ்ஸியும், பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவும் சமமான புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

பழிதீர்த்துக் கொண்ட அர்ஜெண்டினா:
கடந்த 2018 உலகக்கோப்பை தொடரில், குரூப் ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது, குரோஷியா அணி. இந்த 2022 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் குரோஷியா அணியை அதே 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பழிதீர்த்துக் கொண்டது, அர்ஜெண்டினா அணி. இந்த வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா அணி, 6வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
மெஸ்ஸிதான் டாப்:
குரோஷியா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார். இவர், இதுவரை அர்ஜெண்டினா அணிக்காக உலகக்கோப்பையில் 11 கோல்கள் அடித்துள்ளார். மேலும், உலகக் கோப்பை தொடரில் அதிக ஆட்டங்களில் விளையாடிய ஜெர்மன் வீரர் லாதர் மத்தெஷ் சாதனையை சமன் செய்துள்ளார். உலகக் கோப்பையில் 25 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடுவர் மீது குற்றச்சாட்டு:
உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் குரோஷியா அணி அர்ஜெண்டினா அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணியிடம் தோல்வியடைந்தது, குரோஷியா அணி. குரோஷியாவின் கேப்டன் லூகா மாட்ரிச் மற்றும் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிக் ஆகியோர், நடுவர் டேனியல் ஓர்சாடோ மீது “மோசமான நடுவர்களில் ஒருவர்” என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், போட்டிக்குப் பிறகு பேசிய மாட்ரிச் “பெனால்டி வரை நாங்கள் நன்றாக விளையாடினோம், எங்களுக்கு எதிராக பெனால்டி வழங்கியிருக்கக் கூடாது. அப்படியிருந்தும், அர்ஜெண்டினாவை வாழ்த்த விரும்புகிறேன், அவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதியானவர்கள். ஆனால், அந்த பெனால்டி எங்களின் ஆட்டத்தை மாற்றியது” என்று கூறியுள்ளார்.

மொராக்கோவின் வெற்றி ரகசியம் இதுதான்:
உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை மொராக்கோ அணி எதிர்கொள்கின்றது. இந்நிலையில், மொராக்கோ அணியின் பயிற்சியாளர் வாலிட், “மொரோக்கோ அணி வீரர்கள் பலர், தங்கள் குடும்பத்துடன் கத்தாருக்கு வந்துள்ளனர். நாங்கள் இதைப் பற்றி ஊழியர்களுடன் கலந்து பேசினோம். வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில், எங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு வருவது போன்ற விஷயங்களைப் பற்றி நாங்கள் யோசித்தோம். இதுவே உலகக் கோப்பை போட்டியில், நாங்கள் வெற்றி பெற உதவியது, இது எங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. மேலும் அன்பானவர்களின் இருப்பு, அணி வீரர்களுக்கு நம்பிக்கையையும் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது” என்று கூறியுள்ளார். மொராக்கோ அணி வீரர்கள் குடும்பத்துடன் வெற்றியை கொண்டாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது, குறிப்பிடத்தக்கதாகும்.