புதுடில்லி:இந்திய – சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், 5,000 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய ‘அக்னி – 5’ ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் சமீபத்தில் ஊடுருவ முயன்றனர்.
அவர்களை நம் வீரர்கள் தீரத்துடன் போராடி விரட்டி அடித்தனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின், டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட அக்னி – 5 ஏவுகணை சோதனை நேற்று நடந்தது.
ஏற்கனவே எட்டு முறை இந்த ஏவுகணையின் சோதனை நடந்த நிலையில், பல நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு ஒன்பதாவது முறையாக இந்த சோதனை நடந்தது.
சோதனையின் போது, இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்னி — 5 ஏவுகணை, 5,000 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கக் கூடியது. சீனாவின் தலைநகரான பீஜிங் உட்பட, அந்த நாட்டின் முக்கிய நகரங்களை இந்த ஏவுகணை வாயிலாக தாக்க முடியும்.
அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கக் கூடிய இந்த ஏவுகணையை, எந்த ஒரு இடத்திலிருந்தும் ஏவும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஏவுகணை எங்கிருந்து ஏவப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement