சென்னை: தமிழகத்தில் இன்று (டிச.15) வரை 1 கோடி மின் இணைப்புகள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார். இதன்படி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி சென்னையில் சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நடைபெறும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாமினை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”டிசம்பர் 31 ஆம் தேதி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். இதுவரை 1.05 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களின் முழு ஒத்துழைப்புடன் இந்த பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாம்களில் 2 நிமிடத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். 31ம் தேதி வரை பார்த்து விட்டு, அதன் பிறகு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று கால நீட்டிப்பு வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். தேவைக்கு ஏற்ப உயர் அதிகாரிகள் முடிவு செய்து சிறப்பு முகாம்களை நடத்தலாம்.” இவ்வாறு அவர் கூறினார்.