புதுடெல்லி: இந்திய பெருங்கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த சீன உளவு கப்பல் யாங் வாங்-5 திரும்பி சென்றுள்ளது.
சீனா தனது அதிகார எல்லையை விரிவாக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. கடந்த 2020 ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டினர். இந்த மோதலில் சீன வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோரும் இந்திய தரப்பில் 20 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அருணாச்சல் மாநிலம் தவ்லாங் பகுதியில் கடந்த 9-ம் தேதி சீன வீரர்கள் ஊடுருவ முயன்றனர். சுமார் 400 சீன வீரர்கள் எல்லையில் ஊடுருவ வந்தபோது, இந்திய வீரர்கள் துணிச்சலாக தடுத்து விரட்டி அடித்தனர்.
இந்தச் சூழ்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல் யாங் வாங்-5 கடந்த வாரம் இந்தியாவின் தென் பகுதிக்குள் நுழைந்தது. அந்தக் கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து விலகி சென்றதாக கப்பற்படை அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறும்போது, சீனக் கப்பலை அதிநவீன ட்ரோன்கள், போர் விமானங்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
சீனாவின் உளவு கப்பல் யாங்வாங்-5 அறிவியல் ஆராய்ச்சிக் கானது என்று அந்த நாடு கூறுகிறது. ஆனால், அதில் கண்காணிப்பு கருவிகள், அதிநவீன தொலையுணர்வு கருவிகள், ரேடார்கள் என பல்வேறு அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கப்பல் ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் 4 நாட்கள் நிறுத்தப்பட்டது. அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து, சீன உளவு கப்பலை நிறுத்த அனுமதிக்க கூடாது என்று இலங்கை அரசை இந்தியா கேட்டுக் கொண்டது. அதன்பின் ஹம்பந்தோட்டா பகுதியில் இருந்து சீன உளவு கப்பல் யாங் வாங்-5 திரும்பி சென்றது. அதன்பின் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் கடந்த வாரம் நுழைந்த சீன உளவு கப்பல் நேற்று திரும்பி சென்றுள்ளது.
இதுகுறித்து கப்பற்படை தலைமை அட்மிரல் ஆர்.ஹரிகுமார் கூறும்போது, ‘‘சீன உளவு கப்பல் நுழைந்தது உட்பட இந்திய பெருங்கடல் பகுதியில் நடக்கும் எல்லாவிதமான நடவடிக் கைகளையும் தொடர்ந்து கண் காணித்து வருகிறோம். இந்திய பெருங்கடல் பகுதியில் 4 முதல்6 சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது வந்து செல்வதாக தெரிகிறது. தவிர சில ஆராய்ச்சி கப்பல் களும் வந்து செல்கின்றன. சீன மீன்பிடி படகுகளும் இந்திய பெருங்கடலில் சுற்றுகின்றன. அனைத்தையும் நாங்கள் கண் காணித்து வருகிறோம்.
வர்த்தக போக்குவரத்துக்கு இந்திய பெருங்கடல் பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பகுதியில் இந்தியாவுக்கு எதிராக எந்த செயல் நடந்தாலும், அதை சமாளிக்க, பதிலடி கொடுக்க கப்பற்படை தயாராக உள்ளது’’ என்றார்.