இளம் இயக்குனரை கிண்டலடித்தாரா மம்முட்டி ?

மலையாளத்தில் நஸ்ரியா, நிவின்பாலி நடித்த ஓம் சாந்தி ஓசானா மற்றும் டொவினோ தாமஸ் நடித்த சாராஸ் ஆகிய படங்களை இயக்கியவர் இளம் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். இன்னொரு பக்கம் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது 2018ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிகழ்வுகளை மையப்படுத்தி 2018 என்கிற பெயரிலேயே ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

இதில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தநிலையில் இந்தப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மம்முட்டி டீஸரை பாராட்டி பேசும்போது, பேச்சுவாக்கில் ஜூட் ஆண்டனி ஜோசப்பின் தலையில் உள்ள ரோமங்கள் குறைவாக இருந்தாலும் அவரிடம் அதிகப்படியான அறிவு இருக்கிறது என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து இயக்குனரின் தலை வழுக்கையாக இருக்கிறது என்பதை குறிப்பிட்டு மம்முட்டி அவரை உருவ கேலி செய்து விட்டார் என்று சோசியல் மீடியாவில் சிலர் மம்முட்டிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட துவங்கினர். அதேசமயம் படத்தின் இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் இதுகுறித்து கூறும்போது, எனக்கு தலையில் முடி இல்லை என்பது பற்றி எனக்கோ என் குடும்பத்திற்கோ எந்த பிரச்சனையும் இல்லை. மம்முட்டியும் அந்த அர்த்தத்தில் கூறவில்லை.. சொல்லப்போனால் அவர் அப்படி கூறியது எனக்கு கிடைத்த பெருமை. தேவையில்லாமல் வார்த்தைகளை திரித்து ஒரு பெரிய மனிதர் மீது அபாண்டமாக குற்றம் சாட்ட வேண்டாம்” என்று மம்முட்டிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.. இவர் மம்முட்டியுடன் தோப்பில் ஜோப்பன் என்கிற படத்திலும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் தான் இவ்வாறு இயக்குனரை புகழ்ந்து பேசும் விதமாக கூறிய வார்த்தைகள் இவ்வளவு சலசலப்பையும் சர்ச்சையையும் உருவாக்கும் என எதிர்பார்த்திராத மம்முட்டி, இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இனி கவனமாக பேசவேண்டியதற்கு ஒரு முன்மாதிரியாக இது அமைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.