“என் தாய் இறந்த செய்தியை கேட்ட கையோடு, முதல் நாள் மைதானத்துக்குள் போனேன்”- நசீம் ஷா

“என்னுடைய அறிமுக போட்டியே என் வாழ்க்கையின் கடினமான நாளாக மாறியது” என்று தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவத்தை கூறியுள்ளார், பாகிஸ்தானின் இளம்பந்துவீச்சாளரான நஷீம் ஷா.
தன்னுடைய கனவுகளை நிஜமாக்க புறப்பட்ட 16 வயது சிறுவனான நசீம் ஷா, தனது முதல் போட்டியில் விளையாடுவதை அவரது தாயார் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதற்கு மாறான அனுபவங்களை வாழ்க்கை தனக்கு கொடுத்ததாகவும், அதிலிருந்து வெளிவர தனக்கு 8 மாதங்கள் ஆனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார். அவர் தனது 16 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அதன்பிறகு மென் இன் கிரீன் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆனால் இளம் வேகப்பந்து வீச்சாளரான நஷீம் ஷாவிற்கு அவரது பயணம் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. நசீம் ஷா, பல கடினமான காலங்களை கடந்து வந்துள்ளார் என்றே சொல்லலாம்.
image
அதன் ஒரு சிறு உதாரணமாக, சர்வதேச போட்டிகளில் அவருடைய அறிமுக போட்டிக்கு ஒரு நாள் முன்பு நடந்த சம்பவத்தை, சமீபத்தில் விளையாட்டு சேனலுக்கான கலந்துரையாடலில் மனம் திறந்து பேசியுள்ளார் நசீம் ஷா. அந்தப் பேட்டியை மையப்படுத்தியதே இக்கட்டுரை!
நசீம் தனது பாகிஸ்தான் அணிக்காக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடவிருந்த போட்டியே அவரது முதல் போட்டி. தனது முதல் போட்டியின் அறிமுகத்திற்கு ஒரு நாள் முன்பு, அவர் தனது தாயிடம், “நாளை நான் அறிமுகமாகிறேன், என் விளையாட்டை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்ட அவர் தாயும், போட்டி நடைபெறும் லாகூருக்கு வந்து, போட்டியை நேரில் பார்ப்பதாக மகனிடம் கூறியிருக்கிறார். ஆனால் எதிர்பாராவிதமாக நசீம் ஷாவின் தாய், அன்று இரவு உறக்கத்திலேயே இறந்துப்போயுள்ளார். மறுதினம் நசீம் ஷா போட்டிக்காக எழும்போது, அவரது தாயார் இறந்துவிட்டதாக நிர்வாகம் அவரிடம் தெரிவித்துள்ளது.
image
அந்த தருணத்தில் என்ன செய்வதென அறியாமல் திகைத்த நசீம் ஷா, இறுதியில் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறார். அது தன் தாயை இழந்தபோதிலும், பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது என்பது. அப்போட்டியில் விளையாடி, டேவிட் வார்னரின் விக்கெட்டை எடுத்தார் நசீம். அதற்கு பிறகு நசீம் தனது வாழ்க்கையைத் தொடங்க, அனுபவித்த போராட்டங்கள் குறித்து தற்போது உடைத்து பேசியுள்ளார். அந்தவகையில் நசீம் தற்போது பேசுகையில், “என் தாய் இறப்புக்குப்பின், அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்கள், ஒவ்வொரு நாளையும் கடக்க நான் மிகவும் போராடினேன். எனக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி என்னால் சிந்திக்க முடியவில்லை. நான் நிறைய மருந்துகள் உட்கொண்டேன். என் அம்மாவை எல்லா இடங்களிலும் பார்த்தேன். நான் அவரைப் பற்றியே நிறைய யோசித்து கொண்டிருந்தேன்” என்றிருக்கிறார்.
மேலும் “பாகிஸ்தானுக்காக விளையாடும் போதெல்லாம் என்னிடமிருந்து ஒவ்வொருவரும் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கிறார்கள். என் தாயை இழந்த நேரத்தில் எனக்கு நிறைய காயங்கள் இருந்தன. உண்மையில் அது கடினமான நேரமாக இருந்தது. அப்போது வந்த விமர்சனங்களின் வழியே, நான் நிறைய கற்றுக்கொண்டேன். இப்போது நான் வலுவாக இருக்கிறேன். கிரிக்கெட்டில் எனது அறிமுக நாள், எனது வாழ்க்கையின் கடினமான நாள். நான் இப்போது நன்றாக செயல்படாதபோதும் என்னால் அந்தச் சூழலை நிர்வகிக்க முடிகிறதென்றால், அதற்கு காரணம் என் கடந்த காலம் அவ்வளவு கடினமாக இருந்தது” என்றுள்ளார் நசீம்.
image
தற்போது நடந்து முடிந்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ராவல்பிண்டி டெஸ்ட் போட்டி, நசீம் ஷா தனது திறமையை வெளிப்படுத்த மற்றொரு வாய்ப்பாக அமைந்தது. அதை நசீம் தனது சாதகமாக பயன்படுத்தினார்! தனது ரசிகர்களை அவர் ஏமாற்றவில்லை. அந்தவகையில் லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக்ஸ் மற்றும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளையும் சேர்த்து அவர் 5 விக்கெட்டுகளை இப்போட்டியில் வீழ்த்தியிருந்தார் நசீம்.
image
இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் இருந்து இவர் நீக்கப்பட்டுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தோள்பட்டை காயத்திற்குப் பிறகு தேசிய உயர் செயல்திறன் மையத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார் நசீம். விரைவில் நசீம் களத்துக்குள் மீண்டு(ம்) வரவேண்டும் என்பதே அவர் ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.