நியூயார்க்,”பயங்கரவாதி ஒசாமா பின் லேடனுக்கு புகலிடம் கொடுத்தவர்கள், இந்திய பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தியவர்கள், பயங்கரவாதம் குறித்தும், ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்தும் பிரசங்கம் செய்ய என்ன தகுதி உள்ளது,” என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தான் குறித்து நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையுடன் குறிப்பிட்டார்.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் இரண்டு முக்கிய கூட்டங்கள் நியூயார்க் நகரில் நடக்கின்றன.
பயங்கரவாத பிரச்னை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்த இந்தக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க் சென்றுள்ளார்.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் இரண்டாண்டு தற்காலிக உறுப்பினராக உள்ள இந்தியாவின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிகிறது. மேலும், ௧௫ நாடுகள் உள்ள இந்த கவுன்சிலின் தலைமை பொறுப்பை தற்போது இந்தியா வகித்து வருகிறது.
பயங்கரவாதப் பிரச்னை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் தொடர்பான கூட்டத்தில், ௬௦ நாடுகளின் தலைவர்கள் பேசினர். இதில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ பேசுகையில், ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து குறிப்பிட்டார்.
இதன் பின் பேசிய ஜெய்சங்கர் கூறியதாவது:
பெருந்தொற்று, பருவநிலை மாறுபாடு, மோதல்கள் மற்றும் பயங்கரவாதம் என, நம்முன் உள்ள சவால்களில் எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே கவுன்சிலின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும். இந்த கவுன்சிலில், இதற்கு மேலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வதில் காலதாமதம் செய்யக் கூடாது.
இந்தப் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு காண்பதற்கான முயற்சியில் நாம் உள்ளோம். அதே நேரத்தில் நமக்குள்ள ஆபத்துகள், அச்சுறுத்தல்களை இயல்பானதாக்கும் முயற்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாது.
மற்ற நாடுகளால் எதிர்க்கப்படும் விஷயத்தை நியாயப்படுத்துவதுடன், அதை எழுப்பவும் அனுமதிக்கக் கூடாது. இது எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கும் பொருந்தும்.
அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய அல் குவைதா தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், இந்திய பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தியவர்கள், பயங்கரவாதம் குறித்து இந்த கவுன்சிலில் பிரசங்கம் செய்வதற்கு என்ன தகுதி உள்ளது?
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்