கனவு உலகில் மணல் கோட்டை – முதலமைச்சரை சாடிய எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 19 மாத ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருவது கண்கூடு. ஆனால், புதுச்சேரிக்கு சென்று திருமண விழா ஒன்றில் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் தொலைபேசியில் தன்னை பாராட்டுவதாக தனக்குத் தானே சுய பெருமை பேசுகிறார். இவர் திருவாய் மலர்ந்தருளிய பின், கடந்த ஓரிரு வாரங்களில் அரங்கேறிய, சில முக்கிய சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே தோலுரித்துக் காட்டுகிறேன். ஒரு பிரபல நடிகர் நடத்தி வந்த யூடியூப் சேனலை, ஆளும் கட்சியின் வாரிசு ஒருவர் வாங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 8-ந்தேதி அந்த சேனலின் சர்வர் அறையில் விஜயவாடாவைச் சேர்ந்த பாலாஜி என்ற ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும், காவல்துறை இதனை மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காசாங்கோட்டை கிராமத்தில் இரு வகுப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 53 வயதான செம்புலிங்கம் என்பவர் உள்பட இருவரைப் பிடித்து கடுமையாக தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த செம்பு லிங்கம் 8-ந்தேதி இரவு மரணம் அடைந்துவிட்டார். தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். அடுத்து, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள அல்லிகுளம் பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்துவரும் முனுசாமி என்ற வியாபாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உண்மையில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இந்த விடியா அரசின் ஏவல் துறை கட்டுப்படுத்த நினைக்கிறதா? அல்லது ஆளும் கட்சியினரின் கண்ணசைவுக்கு ஏற்ப நடக்க நினைக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. ஏற்கனவே, ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை அருகே கடந்த 27.11.2022 அன்று சர்வதேச மதிப்பில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த போதைப் பொருள் கலக்கப்பட்ட 20 லிட்டர் வாட்டர் கேன்கள், சாதிக் அலி என்பவரது நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பதை கடற்படை போலீசார் தடுத்து, குற்றவாளிகளை கைது செய்தனர் என்றும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்தன.

இதில் சம்பந்தப்பட்ட கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு திமுக கவுன்சிலர் சர்ப்ராஸ் என்பவரும், கீழக்கரை திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயினூதின் என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று செய்திகள் தெரிவித்தன. இந்நிலையில், கடந்த 12.12.2022 அன்று மீண்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் என்ற இடத்தில் சுமார் 160 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், கிறிஸ்டல் மெத்தம் பெட்டமைன் என்ற போதைப் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர் என்று நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக, இந்த போதைப் பொருட்களை கடத்தி வந்த சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் தனசேகர் ஆகிய இரண்டு பேரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை முதல் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வரை உள்ள அத்தனை சோதனைச் சாவடிகளையும் கடந்து, எந்தவித தடையுமின்றி சுமார் 160 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் மண்டபம் வந்தது எப்படி? என்று மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் ஆச்சரியப்படுகின்றனர். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் ஒழுங்கைக் காக்கும் வேலையைப் பார்க்காமல், மக்கள் தன்னை பாராட்டுவதாக கனவு உலகில் மிதந்து மணல் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.