புதுடெல்லி: குஜராத் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்ததற்கு பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
குஜராத் சட்டப்பேரவைக்கு இம்மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 இடங்களை கைப்பற்றி, வரலாறு காணாத வெற்றி பெற்றது. மேலும் அம்மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிஅமைத்துள்ளது. இந்நிலையில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், குஜராத் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்ததற்கு பாஜகவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
குஜராத் மாநில பாஜகவை குறிப்பாக அதன் தலைவர் சி.ஆர்.பாட்டீலை பாராட்டிய பிரதமர், பாஜகவின் அமைப்பு பலமே இந்த வெற்றிக்குக் காரணம் என்றார்.
கட்சி அமைப்பு வலுவாக இருந்தால் தேர்தல் வெற்றி சாத்தியம் என்பதற்கு பாஜகவின் குஜராத் பிரிவு ஓர் உதாரணம் என்று கூறிய பிரதமர், கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவையும் பாராட்டினார்.
தொடர்ந்து பிரதமர் பேசும்போது, “ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டுக்கு முன்னதாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் மக்களை ஈடுபடுத்த புதுமையான யோசனைகளை எம்.பி.க்கள் தெரிவிக்க வேண்டும். பல்வேறு இந்திய நகரங்களில் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் ஏராளமான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட வேண்டும்” என்றார்.
கூட்டத்தில், இந்திய பொரு ளாதாரம் குறித்து மத்திய அமைச் சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசும் போது, “உலகில் வலுவான பொருளாதாரம் கொண்ட முதல் 7 நாடுகளில் இந்தியா பிரகாசமான இடத்தில் உள்ளது. பணவீக்கமும் வேலையின்மையும் முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளில் எப்போதும் அதிகமாகவும் பாஜக ஆட்சிகளில் குறைவாகவும் இருப்பது கடந்த பல ஆண்டுகளின் புள்ளிவிவரம் மூலம் தெரிய வருகிறது” என்றார்.