கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்நகர் பேருந்து நிலையம் அருகே பாடுவான்விளை பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டில் குப்பை கூழங்களுக்கு இடையே 80-வயது மூதாட்டி ஒருவர் படுத்த படுக்கையாக உயிருக்கு போராடியபடி கிடந்திருக்கிறார். இது குறித்து திங்கர்நகர் பேரூராட்சி தலைவர் சுமனுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அவர் காங்கிரஸ் நிர்வாகியான லாரன்ஸ் மற்றும் இளைஞர்களுடன் அங்கு சென்று மூதாட்டியை மீட்டு முதலுதவி செய்திருக்கின்றனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்ததுடன் இரணியல் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
இரணியல் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி தலைமையில் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த மூதாட்டியின் பெயர் கித்தேரி அம்மாள் என்பதும், 34-வருடங்களுக்கு முன்பு கணவன் செல்லையன் இறந்திருப்பதும் தெரியவந்தது. கணவன் இறந்தபிறகு வீட்டு வேலைகளுக்குச் சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தன் ஒரே மகன் செல்வராஜை படிக்கவைத்ததாகவும் பின்னர் மகனுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் போலீஸ் விசாரணையில் மூதாட்டி தெரிவித்தார்.

மூதாட்டியின் மகன் செல்வராஜ் இப்போது தனியாக புதிய பங்களா வீட்டில் வசித்துவரும் நிலையில், பழைய வீட்டுப்பகுதியில் உள்ள ஐந்துக்கு ஏழு என்ற அளவில் உள்ள சிறிய அறையில் மூதாட்டி வசித்துவந்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தெருவில் கிடக்கும் பேப்பர் மற்றும் பழைய பொருள்களை சேகரித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாய் மூலம் சாப்பிட்டு வந்திருக்கிறார். முதுமை காரணமாக கடந்த ஆறு மாதமாக அவரின் கால்கள் செயலிழந்த நிலையில் நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் மூதாட்டி. இதனால் மூதட்டி கித்தேரி அம்மாளுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அவ்வப்போது உணவு கொடுத்துவந்திருக்கின்றனர்.
தொடர்ந்து உடல்நிலை மோசமான நிலையில் தான் சேகரித்த பழைய பேப்பர் ஆகியவை குவித்து வைத்திருந்த குப்பை மேட்டில் தனியாக கிடந்திருக்கிறார் மூதாட்டி கித்தேரி அம்மாள். அவரின் மகனுக்கு தகவல் தெரிந்தும் வந்து கவனிக்காததால் திங்கள்நகர் பஞ்சாயத்து தலைவர் சுமனுக்கு சிலர் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்தே அவர் மீட்கப்பட்டிருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து மூதாட்டியின் மகன் செல்வராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், வீட்டில் சில பிரச்னைகள் நடந்ததாகவும், தாய் தனியாக வேலை செய்து வந்ததால், அவரை விட்டுவிட்டு வந்ததாக போலீஸிடம் தெரிவித்தார். தாயை பார்க்கும் கடமை மகனுக்கு உண்டு எனக்கூறிய போலீஸார், மூதாட்டியை கவனிக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் போலீஸ் தன்னை தாக்கியதாக குளச்சல் அரசு மருத்துவமனையில் செல்வராஜ் அட்மிட் ஆகியிருக்கிறார்.