புதுடெல்லி: கோவை கார் குண்டு வெடிப்பு உட்பட மொத்தம் 497 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் எம்.சண்முகம் மற்றும் மதிமுக உறுப்பினர் வைகோ ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்தியஉள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ஆள் கடத்தல், தடை செய் யப்பட்ட ஆயுத உற்பத்தி அல்லதுவிற்பனை, இணையதள குற்றம்,வெடிப்பொருட்கள் சட்டம்(1908) ஆகியவை 2019-ம் ஆண்டுதேசிய புலனாய்வு முகமை சட்ட (2008) வரம்புக்குள் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து என்ஐஏ நாட்டின் பிற நகரங்களிலும் அலுவலகங்களை திறந்துள்ளது.
இதனால் என்ஐஏ விசாரிக்கும் வழக்குகள் அதிகரித்துள்ளன. கடந்த 2-ம் தேதி நிலவரப்படி, கோவை கார் குண்டுவெடிப்பு உட்பட மொத்தம் 497 வழக்குகளை என்ஐஏ விசாரித்து வருகிறது.
குறிப்பிட்ட எந்த ஒரு சாதி, மதத்தினருக்கு எதிராகவும் என்ஐஏசெயல்படவில்லை. நாட்டு நலன் கருதி, பாரபட்சம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் இறையாண்மையை பாதிக்கும் குற்றச்செயல்கள் தொடர்பாக வெளிப்படையாகவும் நேர்மையாகவும் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண் டனை பெற்றுத் தர வேண்டியது என்ஐஏவின் கடமை.
67 வழக்குகளில் தீர்ப்பு: என்ஐஏ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய பிறகு இதுவரை 67 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 65 வழக்குகளில் குற்றவாளிகள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளன. 2 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.