சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு: கணமலை டூ நிலக்கல் பார்க்கிங் வரை தொடரும் போக்குவரத்து நெரிசல்

கம்பம்:சபரிமலை ஐயப்பன்  கோயிலில் இந்த மண்டல காலத்துக்கான நடை நவ.16ம் தேதி மாலை  திறக்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று காலைவரை கட்டுக்கடங்காமல் பக்தர்கள்  குவிந்து வருகின்றனர். கடந்த மாதம் முழுவதும் சராசரியாக தினமும் 65 ஆயிரம்  முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த  மாதம் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி தினமும் சராசரியாக  80 முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர்.

சில  நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தையும் கடந்தது.  இதனால் பக்தர்கள் 10 முதல் 12 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய  சூழல் ஏற்பட்டது. சபரிமலை செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.  தொடர்ந்து பக்தர்களை கட்டுப்படுத்தவும், உரிய வசதிகள் ஏற்படுத்தவும்  திருவிதாங்கூர் தேவசம் போர்டு, போலீசுக்கு கேரள உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள முதல்வர்  பினராயி விஜயன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் தினசரி  பக்தர்கள் எண்ணிக்கை 90 ஆயிரமாக குறைக்கவும், நிலக்கல்லில் கூடுதல்  வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்துவது உள்பட சிறப்பு ஏற்பாடுகளை  மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. நிலக்கல்லில் தற்போது 8 ஆயிரம்  வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது. இங்கு மேலும் 1000 வாகனங்களை நிறுத்த  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆனாலும், எருமேலி தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் கூட்டம் பம்பாவாலி முதல் நிலக்கல் பார்க்கிங் வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் நேற்று அணிவகுத்து நின்றன. நாராணன் தோடு பகுதியில் போலீசார் கடும் சோதனைக்கு பின்னரே பக்தர்களை அனுமதிக்கின்றனர்.

புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து பக்தர்களை போலீசார் அனுப்பி வைக்கின்றனர். கணமலையிலிருந்து தொடங்கிய போக்குவரத்து நெரிசல் மாலை வரை நிலக்கல் பார்க்கிங் வரை நீடித்தது. கணமலையிலிருந்து 15 கிமீ தூரம் உள்ள நிலக்கல் பார்க்கிங் வரை ஆயிரக்கணக்கான வாகனங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர். கடந்த சில நாட்களாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிட்டத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.