சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் பூஞ்சோலை முதல் சோமசுந்தரம் காலனி குண்டும், குழியுமாக உள்ள தார்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பூஞ்சோலை முதல் பேரூராட்சி பகுதி வரை உள்ள தார்சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக 15, 16, 17, 18 ஆகிய வார்டுகளை இணைக்கும் இந்த தார்சாலை தற்போது குண்டும், குழியுமாக உள்ளது.
அப்பகுதியில் உள்ள நியாயவிலை கடை முன்பு 2 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி கொசுக்கள் உற்பத்தி கூடமாக மாறியுள்ளது. இதன் காரணமாக நியாயவிலை கடைக்கு பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் கொசுக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வழியாக நடந்து செல்வோர், டூவீலர்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.