புதுடெல்லி: கடந்த 9-ம் தேதி அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பிரிவு, யாங்சி பகுதியில், சீன வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைதாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் சீன வீரர்கள் தங்கள் நிலைக்குத் திரும்பிவிட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே, சீன வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டியடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அருணாச்சல பிரதேச எல்லையில் கடந்த 9-ம் தேதி நடந்த சம்பவம் என குறிப்பிடப்பட்டு, இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் எல்லையில் ஊடுருவ முயலும் சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுக்கின்றனர். அதை மீற முயன்ற சீன வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகலப்பில் ஈடுபடுகின்றனர். அப்போது, இந்திய வீரர்கள் சிலர் கம்புகளாலும் அடித்து விரட்டுகின்றனர்.
அப்போது, “அவர்களை (சீனவீரர்கள்) கடுமையாக தாக்குங்கள். அவர்கள் முன்னேறி வர அனுமதிக்காதீர்கள். தலையில் அடியுங்கள். அவர்கள் பகுதிக்கு விரட்டி அடியுங்கள்” என பஞ்சாபி மொழியில்இந்திய வீரர்கள் முழக்கமிடுகின்றனர்.
இதனிடையே, இந்த வீடியோ கடந்த 9-ம் தேதி எடுக்கப்பட்டது அல்ல என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2020-ம்ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றனர்.
அவர்களை இந்திய வீரர்கள் தடுத்ததால், இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் பலமாக தாக்கிக்கொண்டதில் 20 இந்திய வீரர்களும்40 சீன வீரர்களும் உயிரிழந்தனர். அதன் பிறகு கடந்த ஆண்டும் சீன வீரர்கள் ஊடுருவ முயன்றுள்ளனர். அப்போது இந்திய வீரர்கள் அவர்களை விரட்டி அடித்துள்ள னர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இப்போது வெளியாகி உள்ளது என்பது தெரியவந்துள்ளது.