சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த பாவனா, ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ்ப் படங்களில் அறிமுகமானவர். தமிழ், மலையாளம், கன்னடம் எனப் பல படங்களில் நடித்த பாவனா, சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தார்.
இந்நிலையில், ஐந்து வருடங்களுக்குப் பிறகு அறிமுக இயக்குநர் மைமூநாத் அஷ்ரப் இயக்கும் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு’ (Ntikkakkakkoru Premandaarnnu) என்ற படத்தில் ஒப்பந்தமாகி நடித்துள்ளார். இப்படத்தில் ஷராபுதீன், அனார்க்கலி நாசர், அர்ஜுன் அசோகன், செபின் பென்சன் உட்படப் பலர் நடிக்கின்றனர். இதனிடையே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு நேர்ந்த சைபர் தாக்குதல்கள் குறித்துப் பேசியுள்ளார் பாவனா.

இது குறித்துப் பேசிய அவர், “சைபர் தாக்குதல் ஒரு தொழில் என்பதை இப்போது நான் அறிவேன். எனக்கு எதிராக சைபர் தாக்குதல்கள் நிறையவே நடந்திருக்கின்றன. இணையதளம் மூலம் ஒருவரை மிரட்டுவது, புகழுக்குக் களங்கம் விளைவிப்பது போன்றவை இன்று ஒரு தொழிலாகவே மாறி வருகிறது. இவரைத் தாக்க வேண்டும். அந்தப் படத்தை மோசமாக விமர்சிக்க வேண்டும் என்று ஆட்களை அமர்த்தி பணத்தைச் செலவழித்து வருகின்றனர்.
படத்தில் நான் நடித்த கதாபாத்திரங்கள் மூலமே என்னை அறிந்தவர்கள் எனக்கு எதிரான வேலைகளைச் செய்தார்கள். எனது கடினமான காலகட்டத்தில் என் முதுகுக்குப் பின்னால் பேசியவர்களை நான் மறந்துவிடவில்லை. மலையாள சினிமாவுக்கு மீண்டும் வரமாட்டேன் என்று நினைத்திருந்தேன். வந்தால் மன அமைதி போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் என் நட்புகள் என்னை மீண்டும் அழைத்து வந்திருக்கின்றனர்” என்று பேசியிருக்கிறார்.