டெல்லி பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய வழக்கில் 3 பேர் கைது; பொது வெளியில் தூக்கிலிட வேண்டும்: கவுதம் கம்பீர் ஆவேசம்

புதுடெல்லி: டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பொது வெளியில் தூக்கிலிட வேண்டும் என்று கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார். டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் 12ம் வகுப்பு மாணவி, தனது சகோரியுடன் பள்ளிக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், திடீரென மாணவி மீது ஆசிட்டை வீசி விட்டு தப்பி சென்றனர்.

உடல் வெந்ததால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் சாலையில் கீழே விழுந்தார். இந்த கொடூர தாக்குதலில் அவரது முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. அவ்வழியாக வந்தவர்கள், அவரை மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

அதனடிப்படையில் முக்கிய குற்றவாளி உள்பட 3 பேரை கைது செய்தனர். ஆன்லைன் மூலம் நைட்ரிக் அமிலத்தை வாங்கி மாணவி மீது குற்றவாளிகள் வீசியிருக்கலாம் என்றும், தடயவியல் பரிசோதனையின் பின்னரே உறுதிப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு டெல்லி வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். ஆசிட் விற்பனையை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும், ஆசிட் வாங்க வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் மாணவி மீதான ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜ எம்பியுமான கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘வெறும் வார்த்தைகளால் எந்த நீதியையும் நம்மால் வழங்க முடியாது. இந்த மிருகங்களுக்கு அளவிட முடியாத வலியை பற்றிய பயத்தை ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய இளைஞர்களை பொதுவெளியில் பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.