புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் பிரச்னைகள் மீது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உறுதிமொழி அளிக்கின்றனர். இந்த உறுதிமொழி நிறைவேற்றப்படுகின்றனவா, என்பதை கண்காணிக்க சட்டசபையில் உறுதிமொழி கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கமிட்டியின் ஆய்வுக் கூட்டம், நேற்று சட்டசபை கூட்டரங்கில் நடந்தது.
கமிட்டியின் தலைவர் நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கூட்டத்தில் குழு உறுப்பினர்களான அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால்கென்னடி, சிவசங்கரன், ராமலிங்கம், அசோக்பாபு, சட்டசபை செயலர் தயாளன், மின்துறை செயலர் அருண், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் மற்றும் மின்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மின் துறை உறுதிமொழிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மூன்றாவது நபர்
கடலோர மீனவ கிராமங்களில், திட்ட அமலாக்க முகமை சார்பில் புதைவட கம்பிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை சரியாக செயல்படாமல் உள்ளது. இது குறித்து உறுதிமொழி கூட்டத்தில் கேள்வி எழுப்பட்டது.
அதற்கு,திட்ட அமலாக்க முகமை அதிகாரிகள், புதைவட கம்பிகள் கடலோர கிராமங்களில் நல்ல நிலையில் தான் போடப்பட்டுள்ளது என பதிலளித்தனர். இதை மின்துறை அதிகாரிகள் ஏற்கவில்லை. அதனைத் தொடர்ந்து உறுதிமொழி கமிட்டி கடலோர மீனவ கிராமங்களின் புதைவடம் குறித்து மூன்றாம் நபர் மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
மூன்றாம் நபர் ஆய்வில் புதைவட கம்பி நல்ல நிலையில் இருந்தால், மின் துறை பராமரிப்பினை ஏற்க வேண்டும். கம்பி நல்ல நிலையில் இல்லாவிட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது திட்ட அமலாக்க முகமை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
மின்தடை
மாநிலத்தில் ஏற்படும் மின் தடை பிரச்னை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அதிகாரிகள், மின் தடை பிரச்னைைய சரி செய்ய கூடுதல் மின்மாற்றிகள் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதில், ரூ. 9 கோடிக்கு மின்மாற்றிகள் கொள்முதல் செய்து நிறுவப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.6 கோடிக்கு மின்மாற்றிகள் வாங்கி நிறுவினால் மின் தடை பிரச்னை முடிவுக்கு வரும் என்றனர்.

2,000 மின்கம்பங்கள்
மின்கம்பங்கள் உறுதியில்லாமல் ஆங்காங்கே சரிந்து கிடப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அதிகாரிகள், புதிதாக 2,000 மின் கம்பங்கள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதில், 500 கம்பங்கள் கொள்முதல் செய்யப்பட்டுவிட்டது. மீதமுள்ள 1,500 கம்பங்கள் விரைவில் கொள்முதல் செய்து மாற்றப்படும் என்றனர்.
தனியார் மயம்
கடைசியாக மின் துறை தனியார்மயம் பிரச்னையும் எதிரொலித்தது. அதற்கு பதிலளித்த மின் துறை அதிகாரிகள்,ஆரம்பத்தில் 100 சதவீதம் மின் துறை தனியார்மயமாக்க திட்டமிடப்பட்டது. . தற்போது 51 சதவீதம் தனியாரிடமும், 49 சதவீதம் அரசிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இறுதி முடிவு எடுக்கவில்லை.
இது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்து அரசாணையாக இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றனர். தொடர்ந்து மின் துறையின் பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்பட்டது, இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும், எழுத்து பூர்வமாக சந்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு மின் துறை அளிக்க உத்தரவிடப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்