திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏவும், முதலமைச்சர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமென அவரது உற்ற நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆரம்பித்துவைத்தார். நண்பர் என்ற முறையில் அன்பில் அவ்வாறு பேசினார் என பலர் கூறினர். இதனையடுத்து திமுகவின் சூப்பர் சீனியரான ஐ.பெரியசாமி தலைமையில் நடந்த கூட்டத்திலும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது திமுகவின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்தது.
ஆனால் ஏற்கனவே வாரிசு அரசியல் என்று பெயர் எடுத்திருக்கும் திமுக; உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் அந்த வாரிசு அரசியல் பட்டம் வலுப்பெறக்கூடும் என ஸ்டாலின் உதயநிதிக்கான அமைச்சர பட்டாபிஷேகத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஒருகட்டத்தில் திமுகவின் அடுத்த எதிர்காலம் உதயநிதிதான் என்பது உறுதியாகிவிட்டதால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார் முதலமைச்சர்.
இந்தச் சூழலில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது. அப்போது உதயநிதி அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அதேசமயம், அவர் அமைச்சரானதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமசனம் செய்துவருகின்றன.
அந்தவகையில் உதயநிதி அமைச்சரானதற்கு பாஜக சார்பில் விமர்சனம் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சங்கரபாண்டி என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்களில், “தமிழ்நாட்டின் அமைச்சராக பதவியேற்கும் உபிஸ்களின் சின்னவர் உதயநிதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.
மக்களின் வரிப்பணம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் செலவு செய்து மெரினா கடற்கரையில் இவர் திறந்து வைத்த மாற்றுத்திறனாளிகளின் மரப்பாதை வெறும் 13 நாட்களின் புயல் வருவதற்கு முன் வீசிய காற்றில் மரப்பாதை இடிந்து போன சாதனையை செய்து திமுக ஊழல் அமைச்சரவையில் இடம்பெறும் ப்ளே பாய்க்கு வாழ்த்துகள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.