தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. இந்நிலையில், 19 மாதங்கள் கழித்து தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஆளுநர் மாளிகையில் 14-ம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழா முதல் தலைமை செயலகத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது வரை பல்வேறு சுவாரஸ்யங்கள் அரங்கேறி இருக்கிறது.

உதயநிதி வழக்கமாக இளைஞர் அணி சின்னம் பொறித்த வெள்ளை சட்டை, ஜீன்ஸ் பேன்ட் தான் அணிகிறார். எனினும், அமைச்சராக பொறுப்பேற்க வேட்டி கட்டி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது உடையில் எந்த மாற்றத்தை செய்யாமல், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தான் விழாவுக்கு வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், சிறப்பு அழைப்பார்கள் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, உதயநிதியின் மனைவி கிருத்திகா, அவரின் மகள் உள்ளிட்ட குடும்பத்தாரும் ஆல் பிரஸன்ட்.
அதன்படி, காலை 9.30 மணிக்கு அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி, முதல்வர் ஸ்டாலினின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார். பின்னர் மேடையில் இருந்து கீழே இறங்கி அவர், தனது குடும்பத்தாரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதேபோல, கனிமொழியையும் ஆரத்தழுவிக்கொண்டார் உதயநிதி. மேலும், மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி உதயநிதியை கட்டியணைத்து தனது வாழ்த்தை தெரிவித்தார்.
இதையடுத்து, புதிய அமைச்சரவையிடன் ஆளுநர் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு, சீனியர் அமைச்சர் வந்து முதலில் நின்றனர். கடைசியாகதான் உதயநிதி அங்கு வந்தார். அதேபோல, அமைச்சரவையில் அவருக்கு 10-வது இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
உதயநிதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க சார்பில் விழாவில் யாருமே பங்கேற்கவில்லை. ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற கொண்ட சில நிமிடங்களிலேயே, தலைமைச் செயலகத்தில் அவருக்காக தயாரான அறையின் முகப்பில், ‘ உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்’ என்ற பெயர் பலகை மாட்டப்பட்டது.
ஆளுநர் மாளிகையில் இருந்து, அரசு சார்பாக வழங்கப்பட்ட தேசிய கொடியுடன் இருந்த புதிய காரில் கிளம்பிய உதயநிதி, மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி சமாதியில் மலர் தூவி மரியாதை செய்தார். கருணாநிதி சமாதியில், ‘உதயத்தை வரவேற்போம்’ என்று மலரில் எழுதப்பட்டிருந்தது. அதேபோல, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார் என்று முரசொலி செய்திதாள் ஃபிரேம் செய்யப்பட்டு, சமாதி வைக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்து தலைமைச் செயலகத்துக்கு வந்த உதயநிதி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மீண்டும் வாழ்த்து பெற்றார்.
பின்னர் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் படை சூழ 11.15 மணிக்கு அவரின் அறைக்கு வந்தார். அப்போது, அறைக்கு வெளியே இருந்த தொண்டர்கள் ‘வருங்கால முதல்வரே’ என்று கோஷமிட்டு, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். அறைக்குள் நுழைந்த உதயநிதியை அமைச்சருக்கான இருக்கையில், அமைச்சர் துரைமுருகன் பிடித்து அமர வைக்கும் போது, `உங்க அப்பாவையும் நான்தான் முதன்முதலில் இருக்கையில் அமர வைத்தேன்.
இப்போது உன்னையும்’ என்று தனக்கே உரித்தான சிரிப்புடன் கமென்ட் அடித்தார். பின்னர், ‘முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி, நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம், துப்பாக்கிச்சூடும் வீராங்கனை நிவேதிதாவுக்கு 4 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை’ ஆகியவற்றுக்கான கோப்புகளில் கையெத்திட்டார்.

அப்போது, கோப்புகளை புரட்டி பார்க்காமல், உதயநிதி கையெழுத்திடவே, `வேற எதையாவது கொடுத்துடாதீங்க’ என்று அதிகாரிகளை துரைமுருகன் கமென்ட் செய்ய அங்கு சிரிப்பலை எழுந்தது. பின்னர், உதயநிதிக்கு சால்வை போட்டு வாழ்த்துச் சொல்ல அமைச்சர்கள் வரிசை கட்டி நின்றனர்.
ஆனால், சீனியர் அமைச்சர்களை பலரையும் தாண்டி அன்பில் மகேஸ் சால்வை அணிவித்து, அவரை கட்டி அணைத்துக் கொண்டார். பின்னர், அமைச்சர்கள், முதல்வரின் தனிச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்து உதயநிதியை வாழ்த்தினர். உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிகழ்வை மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் தான் முன்னின்று நடத்தினார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி கோபாலபுரத்துக்கு சென்ற உதயநிதிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. பின்னர் தயாளு அம்மாளிடம் ஆசீர்வாதம் வாங்கியவர், சி.ஐ.டி காலனியில் உள்ள கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளிடமும் ஆசி பெற்றார்.