பாட்னா: நீங்கள்தான் குடிகாரர் என்று பாஜக எம்எல்ஏக்களைப் பார்த்து பேரவையில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் சத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிஹார் மாநிலம் சரண் மாவட்டத்தின் சப்ரா பகுதியில் அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது தொடர் பாக, சட்டப்பேரவையில் நேற்று பாஜக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பேரவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
பாஜக மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜய் குமார் சின்ஹா அப்போது பேசும்போது, “2016 முதல் பிஹார் மாநிலத்தில் மது விற்பனை, மது நுகர்வுக்குத் தடை உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் பெருகிவிட்டது. கள்ளச்சாராயம் குடித்து அடிக்கடி பலர் உயிரிழப்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் சப்ரா பகுதியில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்புக்கு முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசுதான் காரணம்” என்றார்.
இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் இந்த கோஷங்களை அரசுக்கு எதிராக எழுப்பினர். ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த முதல்வர் நிதிஷ் குமார், பாஜக எம்எல்ஏக்களைப் பார்த்து நீங்கள்தான் குடிகாரர் என்று சத்தமிட்டார்.
இதனால், பேரவைக்குள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் அவையிலிருந்து வெளியேறி பேரவை வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் சப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்கள் சப்ரா அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, மது விற்பனை மற்றும் மது நுகர்வுக்கு தடை விதித்தது. அதன்பின் கள்ளச் சாராய விற்பனை அதிகரித்து அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.