பலமநேர்- குடியாத்தம் சாலையில் 22 யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம்: குரைத்தபடி சென்ற நாய்களை துரத்தியதால் பரபரப்பு

திருமலை: பலமநேர்- குடியாத்தம் சாலையில் நேற்று அதிகாலை 22 யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் வாகனஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும், குரைத்தபடி சென்ற நாய்களை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமநேர் அடுத்த முசலிமடுகு  தமிழக- ஆந்திர எல்லை கிராமம் ஆகும். இந்த கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து  22 யானைகள் கொண்ட கூட்டம் நேற்று அதிகாலையில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் சாலையில் வந்தன.

இதனால், யானைகள் கூட்டம் தங்கள் கிராமங்களை நோக்கி வந்து விடுமோ? என்ற அச்சத்துடன் கிராமமக்கள் வனப்பகுதிக்கு யானைகளை துரத்த முயன்றனர். அப்போது, சிலர் கற்களை ஏறிந்ததாக தெரிகிறது. மேலும், அங்கிருந்த நாய்கள் யானைகளை பார்த்து குரைத்தபடி சென்றன. உடனே, கூட்டத்தில் இருந்த ஒரு யானை குரைத்த நாய்களை துரத்தியது.   ஒரு யானை சத்தமிட்டு கொண்டு கிராமமக்களை துரத்தியதால் அலறியடித்து கொண்டு ஓடினர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், சுமார் 30 நிமிடம் சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழக எல்லையான குடியாத்தத்தில் இருந்து வந்த வாகனஓட்டிகளும், ஆந்திராவில் பலமநேரில் இருந்து வந்த வாகனஓட்டிகளும் யானைகள் செல்வதற்காக இருப்புறமும் காத்திருந்தனர். பின்னர், வனத்துறையினர் வந்து பட்டாசு வெடித்தும், மேளம் அடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் கூட்டம் தங்கள் கிராமங்களை நோக்கி வந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தைகள், முதியவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ‘யானைகள் கிராமங்களுக்கு வராமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகள் சுற்றி வரும் பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு எல்லை கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதி என்பதால் எங்கு சென்றாலும் அந்தந்த மாநில வனத்துறையினர் துரத்தி விடுகின்றனர். இதனால், யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சுற்றளவு குறைந்து சாலைகள், குடியிருப்புகள் என மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வருவது அதிகரித்துள்ளது’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.