கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவை இன்று அமைச்சர் எவவேலு தொடங்கி வைக்கிறார்.
பொதுமக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் எண்ணத்திலும், நல்ல கருத்துக்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும் நோக்கத்திலும் தமிழக அரசின் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த புத்தக கண்காட்சியின் மூலம் பொதுமக்களும் புத்தகப் பிரியர்களும் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படித்து வருகின்றனர். மேலும் எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை புத்தக கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக துறை சார்பில் கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி அருகில் உள்ள திடலில் இன்று மாலை 5 மணிக்கு கள்ளக்குறிச்சி புத்தகத்திருவிழா ஆரம்பமாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இந்த புத்தகத்திருவிழா இன்று முதல் டிசம்பர் 25ம் தேதி வரை 11 நாட்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத்திருவிழா நடைபெற உள்ளது. இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், நாள்தோறும் தமிழ் சிந்தனையாளர்களின் சிறப்பு பட்டிமன்றம், கருத்தரங்கம், பல்சுவை நிகழ்ச்சிகள், இலக்கியம் சார்ந்த சொற்பொழிவுகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.