தேனி மாவட்டத்தை அடுத்த தேவனாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருக்கு ஜோதி லட்சுமி என்ற மனைவியும் மாயாண்டி, மருதுபாண்டி, சிவா என்ற மூன்று மகன்களும் உள்ளனர். இவர்களின் இரண்டாவது மகனான மருதுபாண்டி திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இவர் தற்பொழுது வேலைக்குச் செல்லாமல் மது, கஞ்சா, போதை மாத்திரைக்கு அடிமையாகி உள்ளார்.
இந்த நிலையில் மருதுபாண்டியர் நேற்று காலை அவரது தாய் ஜோதிலட்சுமியிடம் கஞ்சா வாங்குவதற்காக 50 ரூபாய் பணம் கேட்டுள்ளார். தனது மகன் போதைக்கு அடிமையாக இருப்பதை அறிந்த ஜோதிலட்சுமி பணம் தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து தகராதில் ஈடுபட்டு வந்த மருதுபாண்டி ஆத்திரத்தில் வீட்டிலிருந்த கோடரி எடுத்து தனது தாயின் பின் தலையில் பலமாக அடித்துள்ளார்.
அவரின் அலறல் குரல் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது தரையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். இதனை அடுத்து படுகாயம் அடைந்த ஜோதிலட்சுமி ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜோதிலட்சுமி சிகிச்சை பலன் இன்றி பரிதமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பெரியகுளம் காவல்துறையினர் தலைமறைவாக இருந்த மருது பாண்டியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் மஞ்சளாறு அணை பகுதியில் மது, கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக கிடைப்பதால் இளைஞர்கள் இதற்கு அடிமையாகக் கிடப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மஞ்சளாறு அணைப்பகுதியில் மது, கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்யும் சமூக விரோதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கஞ்சா போதைக்கு அடிமையாகி பெற்ற தாயையே அடித்து கொலை செய்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.