சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்
திமுக இளைஞரணிச் செயலாளராக இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டுமென அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததுடன், ஆளுநருக்குப் பரிந்துரைத்தார். முதல்வரின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, நேற்று காலை கிண்டி ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், உதயநிதி ஸ்டாலி னுக்கு ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை முதல்முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் ஆகிய துறைகள் ஒதுக்கப் பட்டுள்ளன.
முன்னதாக, ஆளுநர் மாளிகைக்கு வரும் முன்னர், நேற்று காலை 8.45 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி, 9.02 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்தார். 9.20 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு வந்தார்.
அதற்கு முன்னதாகவே, அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு மற்றும் அதிகாரிகள் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். நீதிமன்ற வழக்கு காரணமாக அமைச்சர் கீதா ஜீவன் மட்டும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.
காலை 9.30 மணிக்கு தர்பார் அரங்குக்கு ஆளுநர் ரவி வந்தார். பதவியேற்பு விழாவை தலைமைச் செயலர் வெ.இறையன்பு தொடங்கிவைத்தார். உதயநிதிக்கு அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநர் ரவி, ரகசியக் காப்பு உறுதிமொழியை ஏற்கச் செய்தார்.
பதவியேற்பு நிகழ்வு 9.38 மணிக்கு நிறைவடைந்த நிலையில், ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் அங்கு நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.
பின்னர், முதல்வர் மற்றும் விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள் குழுவினர் ஆளுநருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதியின் மனைவி கிருத்திகா, மகள் தன்மயா, சகோதரி செந்தாமரை, அவரது கணவர் சபரீசன், முதல்வரின் சகோதரர் மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி., முரசொலி செல்வம், தயாநிதிமாறன், மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்து மெரினா கடற்கரைக்கு வந்து, அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தலைமைச் செயலகம் வந்த உதயநிதியை, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, கே.ஆர்.பெரியகருப்பன், தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எஸ்.ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், அர.சக்கரபாணி, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.மதிவேந்தன் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
3 கோப்புகளில் கையெழுத்து: இதையடுத்து, தமிழ்நாட்டுப் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டு வீரர்களின் நலனுக்காகவும் 3 முக்கியக் கோப்புகளில் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
முதல்வரால் அறிவிக்கப்பட்டபடி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் இந்த ஆண்டுக்கான முதல்வர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகளில் கபடி, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெறும் வகையில், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைவரையும் உள்ளடக்கி 16 பிரிவுகளில் ரூ.47.04 கோடி செலவில் போட்டிகள் நடத்தவும், அதற்காக மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு, மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் குழு ஆகிய குழுக்களை அமைப்பதற்கான கோப்பில் உதயநிதி கையெழுத்திட்டார்.
தொடர்ந்து, நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 9 வீரர்களுக்கு கடந்த மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை மாதம் ரூ.3 ஆயிரம், அதன் பின்னர் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குவதற் கான கோப்பில் கையெழுத்திட்டார்.
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை நிவேதிதாவுக்கு ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதற்கான கோப்பிலும் கையழுத்திட்டார். தொடர்ந்து, ஓய்வூதிய ஆணைகள், ஊக்கத்தொகை காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கா.ப.கார்த்திகேயன் உடனருந்தனர். அங்கிருந்து பெரியார் திடல் சென்று பெரியார் நினைவிடத்திலும், அண்ணா நகரில் உள்ள திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இல்லத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர், கோபாலபுரம் இல்லம் வந்த உதயநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சிஐடி நகரில் உள்ள இல்லத்துக்குச் சென்று ராசாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்ற பின்னர், தனது இல்லத்துக்குத் திரும்பினார்.