மதுரை: தமிழகத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டம் முறையாக நடைபெறுவது இல்லை என்று உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தென்காசியைச் சேர்ந்த மணிகண்டன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாருகாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்தின் பொறுப்பாளர்களாக சுப்புலட்சுமியும், ஊராட்சி உறுப்பினர் முருகலட்சுமியும் உள்ளனர். பொறுப்பாளர்கள் 3 மாதங்கள் மட்டுமே அந்தப் பொறுப்பில் இருக்க முடியும். ஆனால், இவர்கள் 7 மாதங்களுக்கு மேலாக பொறுப்பாளர் களாகத் தொடர்கின்றனர்.
தாருகாபுரத்தில் முருகலட்சுமியின் தந்தை ராமச்சந்திரனுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், தென்னை மரங்களைப் பராமரித்தல் ஆகிய பணிகளில் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை ஈடுபடுத்துகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை, சொந்த பணிக்குப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்த திட்டத்தை முறைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், தனியார் விவசாய நிலத்தில் பணிபுரியும் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து நீதிபதிகள், “100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், தனியார் நிலத்தில் பணிபுரிவது மனுதாரர் தரப்பில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 100 நாள் வேலைத் திட்டம் முறையாக நடைபெறவில்லை. எனவே, தமிழக ஊரக வளர்ச்சித் துறைச் செயலர், வழக்கின் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்படுகிறார். அவர், 100 நாள் வேலைத் திட்டத்தின் நடைமுறைகள் குறித்தும், மனு குறித்தும் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மேலும், விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.