பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா திரைப்பட விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். தற்போது, அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் பதான் திரைப்படத்தின் பாடல் தற்போது சர்ச்சையாகி வரும் நிலையில், அதுகுறித்து அவர் பேசியுள்ளார்.
விழா மேடையில் அவர் பேசியதாவது,”இத்தனை நாட்களாக நான் இங்கு வந்து உங்களோடு பேசவில்லை. இப்போது, உலகம் சாதாரணமாகிவிட்டது, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உலகம் என்ன சொன்னாலும், நான், நீ மற்றும் எல்லா நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களும் உயிருடன்தான் இருக்கிறோம் என்று சொல்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.
சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுபோன்ற சமயங்களில் சினிமாவின் வேலை மேலும் வளர வேண்டும். நேர்மறையாக இருக்கும் வரை, நானும் இருப்பேன், நீங்களும் இருப்பீர்கள்.
#WATCH | No matter what the world does, people like us will stay positive: Shah Rukh Khan at Kolkata International Film Festival pic.twitter.com/QL6uyRFACS
— ANI (@ANI) December 15, 2022
சமூக ஊடகங்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட குறுகிய பார்வையால் இயக்கப்படுகின்றன. அது மனித இயல்பை அதன் கீழ்த்தரமான சுயமாக மட்டுப்படுத்துகிறது. எதிர்மறை சமூக ஊடக நுகர்வு அதிகரிக்கிறது என்பதை எங்கோ படித்தேன். இது போன்ற நாட்டங்கள் கூட்டாக வாழ்வதை பிரித்து அழிக்கும்” என்றார்.
அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் பதான் படத்தின், பெஷாராம் ராங் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் யூ-ட்யூபில் வெளியானது. அந்த பாடலில், நடிகை தீபிகா படுகோன் பிகினி உடையில் நடனமாடுவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஒரு காட்சியில் தீபிகா காவி நிறத்திலான பிகினியை அணிந்துள்ளார். இதற்கு மத்தியப் பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உள்ளிட்ட பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
தெருக்களில் போராட்டம் நடத்திவரும் அவர்கள், Boycott Pathaan (பதானை புறக்கணிப்போம்) என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டர் டிரெண்ட் செய்து தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். தொடர்ந்து, ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.