திண்டுக்கல் மாவட்டத்தில் பொது நுாலகத் துறை சார்பில் ’நூலக நண்பர்கள் திட்டம்’ தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அப்போது விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,‘நுாலக நண்பர்கள்’திட்டம் தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில்தான் முதன்முறையாக தொடங்கப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் ஆகியோரின் இல்லங்களை தேடி புத்தகங்களை கொண்டு சென்று அவர்களின் புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். நூலகத்திற்கு வரமுடியாத மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், புத்தக ஆர்வலர்கள், குழந்தைகள், மாணவர்கள், குடும்பத் தலைவிகள். மருத்துவமனை உள்நோயாளிகள் ஆகியோரை தேடி, அவர்கள் இருக்குமிடத்திற்கே நூலக நண்பர்கள் மூலம் நூல்களை கொண்டு செல்ல இருக்கிறது. நூலகத்திற்கும் இல்லங்களுக்கும் இடையே நூல்களை கொண்டு செல்லும் சேவை பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்திலேயே முதல் முறையாக திண்டுக்கல்லில் நூலகத் துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டத்தை துவக்கி உள்ளோம். வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. ஆசிரியர் காலி பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்றும் கூறினார்.