லண்டன்: வைர வியாபாரி நீரவ் மோடியும் அவரது உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி அளவில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தனர். இந்த வழக்குத் தொடர்பான கைது நடவடிக்கையிலிருந்துத் தப்பிக்க 2018-ம் ஆண்டு அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் சென்றனர். மெகுல் சோக்ஸி ஆன்டிகுவா தீவுக்கு தப்பிச் செல்ல, நீரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார்.
இந்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் பிரிட்டன் அரசு 2019-ம் ஆண்டு நீரவ் மோடியை கைதுசெய்து சிறையில் அடைத்தது. அதுமுதலே அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்புவதற்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி தருமாறு நீரவ்மோடி லண்டன் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் தற்கொலை செய்துகொள்ளக்கூடும் என்றும் நீரவ் மோடி அந்த மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நீரவ் மோடியின் மனநலம் நல்ல நிலையிலேயே உள்ளது. அவரது மேல்முறையீட்டில் எந்த நியாயமும் இல்லை என்று கூறி அவரது மனுவை நிராகரித்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்படுவார்: நீரவ் மோடி தற்போது லண்டன் வாண்ட்ஸ்வர்த் சிறையில் உள்ளார். தனக்கான சட்ட உரிமையைப் பயன்படுத்தி, இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதிலிருந்து அவர் தப்பித்து வந்தார். தற்போது அவருக்கான சட்ட வாய்ப்புகள் முடிந்துவிட்டன. இந்நிலையில், விரைவில் அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.