இந்து மதத்தை புண்படுத்துகிறதா ஹிந்தி பாடல் : ஷாரூக்கானின் ‛பதான்' படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

மும்பை : ஷாரூக்கான் நடித்துள்ள ‛பதான்' படத்திலிருந்து வெளியாகி உள்ள 'பேஷ்ரம் ரங்' பாடல் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக கூறி இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பதான் படத்தை திரையிட விட மாட்டோம் என வட மாநிலங்களில் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அவற்றை புறக்கணிக்க சொல்லி டிரெண்ட் செய்வது அதிகமாகி உள்ளது. தற்போது ஷாரூக்கானின் பதான் படமும் இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து 'பேஷ்ரம் ரங்' என்ற பாடல் வெளியானது. இதில் தீபிகா மிகவும் ஆபாசமாக நடனம் ஆடியது, அவர் அணிந்த காவி நிற நீச்சல் உடை, 'பேஷ்ரம் ரங்' என்ற வார்த்தையின் அர்த்தம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வேண்டுமென்றே இந்துக்கள் மனம் புண்படும்படி ஷாரூக்கான் இப்படி செய்திருக்கிறார் என்று பலரும் ஆவேசத்துடன் #BoycottPathaan, #BanPathaan என ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த படத்தை திரையிட மாநில அமைச்சர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த படத்தை திரையிட விட மாட்டோம் என தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. சில ஊர்களில் ஷாரூக்கானின் உருவ பொம்மையையும், அவரின் போஸ்டரை எரித்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்து மத தலைவர்களும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தின் தலைவர் ராஜு தாஸ் கூறுகையில், ‛‛காவி நிறத்தில் பிகினி அணிய வேண்டிய அவசியம் என்ன. வேண்டுமென்றே இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக எடுக்கப்படும் இதுபோன்ற படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இந்த படம் எங்கு திரையிடப்பட்டாலும் தியேட்டரை தீயிட்டு கொளுத்துவோம்'' என்றார்.

குறுகிய பார்வை – ஷாரூக்கான் தாக்கு
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஷாரூக்கான். கோல்கட்டாவில் துவங்கி உள்ள 28வது கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழா நேற்று மாலை துவங்கியது. இதில் கலந்து கொண்டு ஷாரூக்கான் பேசியதாவது : ‛‛நமது காலம் இப்போது சமூக வலைதளங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சினிமாவை எதிர்மறையாக பாதிக்கிறது. இதனால் இப்போது சினிமாவின் பங்கு இன்னும் முக்கியத்துவம் பெறும் என நம்புகிறேன். சமூகவலைதளங்கள் பெரும்பொலும் குறுகிய பார்வையுடன் கீழ்த்தரமாக செயல்படுகின்றன. எதிர்மறை விஷயங்கள் அதிகமானால் அது வணிக தரத்தை உயர்த்தும் என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் அழிவுப்பாதைக்கு தான் வழிவகுக்கும். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த உலகம் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், செய்யட்டும். நானும், நீங்களும் மற்றும் உலகில் உள்ள அனைத்து நேர்மறையான மனிதர்களும் உயிருடன் இருக்கிறோம்''.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.