எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் பெட்ரோல் விலையை குறைக்க முடியாது: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு; காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் பெட்ரோல் விலையை குறைக்க முடியாது என்று ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மக்களவையில் தெரிவித்தார். இதை கண்டித்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. முரளிதரன் பெட்ரோல் விலை குறைக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதில், கடந்த 2014ம் ஆண்டு சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 107 அமெரிக்க டாலராக இருந்தபோது இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71 ஆக இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை 78 டாலராக இருந்தாலும் பெட்ரோல் விலை ரூ.100க்கும் அதிகமாக உள்ளது. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் விலையை குறைக்காதது ஏன்? என்று அவர் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசியதாவது: இந்தியாவில் தான் பெட்ரோலிய பொருட்கள் விலை குறைவாக உள்ளது. இந்தியா தனது தேவைக்காக 85 சதவீத கச்சா எண்ணெயை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது.  கச்சா எண்ணெய் கொள்முதல் விலை, மாற்று விகிதம், கப்பல் கட்டணம், உள்நாட்டு சரக்கு, சுத்திகரிப்பு மார்ஜின், டீலர் கமிஷன், மத்திய வரிகள், மாநில வாட் மற்றும் பிற செலவு கூறுகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் இருக்கும். நவம்பர் 2020 – நவம்பர் 2022க்கு இடையில் இந்தியக் கூடை கச்சா எண்ணெயின் சராசரி விலை 102 சதவீதம் (அமெரிக்க டாலர் 43.34 முதல் 87.55 வரை) அதிகரித்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலைகள் 18.95 சதவீதம் மற்றும் 26.5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் வரலாறு காணாத விலை உயர்ந்த போதிலும், 2022 ஏப்ரல் 6 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.27,276 கோடி நஷ்டம் ஏற்பட்டது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தில் இருந்து இந்திய நுகர்வோரை காப்பற்றுவதற்காக, ஒன்றிய அரசு நவம்பர் 21, 2021 மற்றும் மே 22, 2022 ஆகிய தேதிகளில் ஒன்றிய கலால் வரியை இரண்டு முறை குறைத்துள்ளது.

இதனால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு முறையே லிட்டருக்கு ரூ.13 மற்றும் ரூ.16 என ஒட்டுமொத்தமாக குறைத்து, இது முழுமையாக நுகர்வோருக்கு வழங்கப்பட்டது. அதே போல் நாட்டின் தேவையில் 60 சதவீத எல்பிஜி காஸ் இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு எல்பிஜி விற்பனையில் பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன, இந்த இழப்பை ஈடுகட்ட, அவர்களுக்கு ரூ.22,000 கோடியை ஒருமுறை இழப்பீடாக வழங்க அரசாங்கம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் மீதான எக்சைஸ் வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. சில மாநிலங்கள் பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை குறைத்தன.

ஆனால், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை.எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் மாநில அரசுகளிடம் வாட் வரியைக் குறைக்க வேண்டும் வலியுறுத்த வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார். ஒன்றிய அரசு வசூலிக்கும் வரியை குறைக்க சொன்னால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாட் வரியை குறைக்கவில்லை என்று அமைச்சர் கூறியதை ஏற்க முடியாது என கூறி எதிர்க்கட்சி எம்பி.க்கள் அவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என்பதை அமைச்சர் சூசகமாக தெரிவித்தார். இதனால் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால் அவையில் இருந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

* மாநிலங்களவையிலும் கடும் அமளி
மாநிலங்களவை நேற்று கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் ஒன்றிய விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது, விவசாயிகள் போராட்டம், ஜனநாயக முறையை நசுக்குவது, தேர்தல் செயல்முறைக்கு அச்சுறுத்தல் உட்பட பல்வேறு முக்கியத்துவம்  வாய்ந்த விஷயங்கள் தொடர்பாக விவாதிக்க அளித்த ஒத்திவைப்பு நோட்டீசை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், சபாநாயகர் அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், முதல் ஒரு மணி நேரத்தில் மட்டும் அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.