குண்டூர் : ஆந்திரா மாநிலம் குண்டூரில் கிட்னிக்கு ரூ.3 கோடி தருவதாக கல்லுாரி மாணவியிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.
குண்டுரை சேர்ந்த மாணவி ஐதராபாதில் விடுதியில் தங்கி நர்சிங் கல்லுாரியில் படித்து வருகிறார். அவர் தந்தையின் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் எடுத்து செலவு செய்தார்.
தந்தை கண்டுபிடிக்கும் முன் அந்த பணத்தை திருப்பி கட்ட எண்ணிய மாணவி, தன் ஒரு சிறுநீரகத்தை விற்க முடிவு செய்தார். அதன்படி இணையத்தில் சிறுநீரகத்தை விற்க தயார் என அறிவித்தார். மாணவியிடம் பிரவீன் ராஜ் என்பவர் சிறுநீரகத்தை ரூ.3 கோடிக்கு விற்று தருவதாக கூறினார்.
மேலும் மாணவியிடம் அதற்கு முன்பணமாக ரூ.1.50 கோடி தர ரூ.16 லட்சம் சரிபார்ப்பு கட்டணமாக அனுப்பும்படி கூறினார்.
மாணவியும் அதை நம்பி தந்தை வங்கி கணக்கில் இருந்து ரூ.16 லட்சத்தை பிரவீன் ராஜூக்கு கொடுத்தார். அதன் பிறகு பணம் வராததுடன், அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை.
ஏமாற்றப்பட்டதையறிந்த மாணவி ரூ.16 லட்சத்தை பிரவீன் ராஜிடம் கேட்டார். அவரும் டில்லியில் ஒரு முகவரியை கொடுத்து அங்கு பணம் பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.
மாணவி டில்லி சென்ற போது முகவரி போலி எனத் தெரிந்தது. இதையடுத்து மாணவி குண்டூரில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
வங்கி கணக்கில் இருந்து ரூ.16 லட்சம் எடுக்கப்பட்டது அறிந்து தந்தை கேட்டதால் பயந்து போன மாணவி ஐதராபாதில் இருந்து தலைமறைவானார். பின் போலீசார் ஜக்கைய பேட்டையில் உள்ள தோழி வீட்டில் இருந்து அவரை மீட்டனர். பணத்தை மோசடி செய்தவர் குறித்தும் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement