பாபாநாசம்: பாபாநாசத்தில் மூதாட்டியைத் தரக்குறைவாக பேசிய அரசு பேருந்து நடத்துநர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், மெலட்டூரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று மதியம், திருக்கருகாவூரிலிருந்து சென்ற அரசு நகரப் பேருந்தில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றார். பின்னர் மீண்டும், தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக, அதே பேருந்தில் அந்த மூதாட்டி ஏறினார்.
அப்போது, பேருந்தில் இருந்த நடத்துநர், ”காசு ஓசியென்றால் போயிட்டு போயிட்டு வருவியா” என்றார். இதற்கு அந்த மூதாட்டி, “காசு ஓசி என்று நான் பேருந்தில் போகவில்லை, ஏன் தம்பி கோபமாகப் பேசுகிறாய், மாலை போட்டுள்ள நீங்க இப்படியைப் பேசுவீர்களா” எனப் பரிதாபமாகக் கேட்கிறார்.
இதனைப் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்தார். இந்த வீடியோ காட்சி வைரலாக பரவியது. இந்த வீடியோ காட்சி வெளியானதையடுத்து, கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி, மூதாட்டியை தரக்குறைவாகப் பேசிய, மானாங்கோரையைச் சேர்ந்த ரமேஷ் குமாரை இன்று தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
வீடியோ: