புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று மட்டுமின்றி இந்தாண்டு இந்தியாவில் 5 வகையான வைரஸ்கள் பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தாக்கம் மக்களை பாதித்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் அதன் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், சீனா போன்ற நாடுகளில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வந்த நிலையில், இந்த ஆண்டில் மட்டும் கொரோனா வைரஸைத் தவிர, மேலும் வைரஸ் தொற்றுகளால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட அந்த வைரஸ்கள் பட்டியலில், ‘மங்கி பாக்ஸ் வைரஸ்’ முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பா உட்பட பல நாடுகளில் பரவிய இந்த வைரஸ், இந்தியாவிலும் கூட அதன் தாக்கத்தை வெளிப்படுத்தியது. சில மாதங்களுக்கு முன், குரங்கு அம்மை வைரஸின் பெயரை எம்.பி.ஓ.எக்ஸ் என்று உலக சுகாதார நிறுவனம் மாற்றியது.
இந்த வைரசால் இந்தாண்டு மட்டும் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அதற்கடுத்ததாக இந்தியாவில் கால்நடைகளில் ேவகமாக பரவிய லாம்பி வைரஸ் நோயாகும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் பாதிக்கப்பட்டன. அதேபோல் கேரளா உட்பட உலகின் பல பகுதிகளில் தக்காளி காய்ச்சலால் பெருமளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
மேலும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. வவ்வால்கள் அல்லது பன்றிகள் மூலம் இந்த வைரஸ் பரவியது. இந்த நோயின் தாக்கம் கேரளாவில் அதிகம் காணப்பட்டது. அதற்கடுத்ததாக கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டது. கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.