சென்னை பயணிக்கு மன உளைச்சல் – ரூ.50,000 இழப்பீடு வழங்க எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு உத்தரவு

சென்னை: சென்னையைச் சேர்ந்த பயணியை துபாய் விமான நிலையத்தில் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷினு தாமஸ் என்பவர் சென்னையில் இருந்து துபாய் சென்று மீண்டும் சென்னை திரும்புவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கட் புக் செய்துள்ளார். சென்னையிலிருந்து துபாய் சென்ற ஷினு தாமஸ், 2016-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி பிற்பகலில் சென்னை திரும்புவதற்காக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவசர மருத்துவக் காரணங்களுக்காக சிலர் செல்லவேண்டி உள்ளதால், இரவு விமானத்தில் செல்லும்படியும், அதற்கு நிவாரணமாக, ஒரு முறை துபாய் வந்து செல்வதற்கான இலவச டிக்கெட், 100 திர்ஹாம் மதிப்பிலான வரி இல்லாத கூப்பன், ஒரு நாள் இரவு இலவசமாக தங்குவதற்கான கூப்பன் ஆகியவற்றை தருவதாகவும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டு இரவு 9 மணி விமானத்தில் செல்ல ஷினு தாமஸ் ஒத்துக்கொண்ட நிலையில், திடீரென பகலில் செல்லும் விமானத்திலேயே செல்லும்படி அரை மணி நேரத்திற்கும் குறைவான அவகாசம் வழங்கி, உடனே புறப்படும்படி நிர்பந்தித்தாக கூறப்படுகிறது.

அதன்படி சென்னை திரும்பிய ஷினு தாமஸ், துபாய் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் அளித்த மன உளைச்சலுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றி சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த தலைவர் வீ.ராமராஜ், உறுப்பினர்கள் என்.பாலு மற்றும் வி.லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், ஷினு தாமசுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரத்தை, நான்கு வார காலத்திற்குள் எமிரேட்ஸ் விமான நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.