புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த எஸ். ஜெய்சங்கர்: ஐ.நா. பாதுகாப்பு அவையில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார். அப்போது, பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு பாகிஸ்தான் என சாடினார். இதையடுத்து, ஐ.நா பாதுகாப்பு அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தோடு தொடர்பு படுத்தி கடுமையாக விமர்சித்தார்.
பிலாவல் பேச்சுக்கு கண்டனம்: இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “விரக்தியின் விளிம்பில் இருந்துகொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாட்டைச் சேர்ந்த அவரின் பேச்சு, பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.
ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்ந்த நாடு பாகிஸ்தான். லக்வி, ஹபீஸ் சையத், மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் என ஐ.நா.வால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட 126 பேருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு பாகிஸ்தான். ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட 27 பயங்கரவாத அமைப்புகளை செயல்பட அனுமதித்திருக்கும் நாடு பாகிஸ்தான். அந்த நாட்டைச் சேர்ந்த பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு” என்று தெரிவித்தார்.
டெல்லியில் பாஜகவினர் போராட்டம்: முன்னதாக, பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜகவினர் புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராகவும், பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.