புதுச்சேரி: கலை ஆர்வத்துடன் கற்பனையை கூட்டி சேர்த்தால் பயனற்ற பொருட்களும் அழகுப்பொருட்களாக அவதரிக்கும் என்று நிரூபித்துள்ளனர் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள். உலகம் முழுவதும் அவதார் 2 ஆம் பாகம் வெளிவந்துள்ள நிலையில் அதில் இடம் பெரும் கதாபாத்திரங்களையும் தத்ரூபமாக வடிவமைத்து வியக்க வைத்துள்ளார். புதுச்சேரியில் உள்ள வாணிதாசனார் அரசு உயர்நிலை பள்ளியில் படித்து வரும் மாணவர்கள்தான் இந்த அழகிய கைவினை பொருள்களை உருவாக்கியவர்கள்.
கல்வியுடன் கைதொழில் ஒன்றை கற்றுக்கொள்வதை அவசியம் என்ற ஆசிரியர் உமாபதியின் அன்பு கட்டளைக்கு இணங்க, கைவினைகளில் கலைநயத்தை புகுத்திவருகிறார்கள் மாணவர்கள். துரும்பு கூட அழகாகும் என்பதை உணர்ந்த அவர்கள் எளிதில் கிடைக்கும் தேங்காய்நார்,தேங்காய்மட்டை, சிரட்டை, பனைஓலை, தாவர வேர்களை கொண்டு 1000க்கும் மேற்பட்ட பொருள்களை உருவாக்கி அழிவில் உயிர்ப்பு என்ற தலைப்பை உருவாக்கி பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பள்ளி வளாகத்தில் சுரைக்காயை பயிரிட்ட மாணவர்கள் அவற்றின் உலர்த்த குடுவைகளை கொண்டு மீன், தவளை, பறவைகள் போன்றவற்றை வடிவமைத்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் ஹாலிவுட் திரைப்படம் மூலம் கற்பனை காட்சிகளை கண்களுக்கு முன் விரிவடைய செய்திருக்கும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 ஆம் பாகத்தின் கதாபாத்திரங்களை ஏழே நாட்களில் தத்ரூபமாக வடிவமைத்து உயிர்கொடுத்திருக்கிறார்கள் இரு மாணவர்கள். அவதார் தனக்கு மிகவும் பிடித்த படம் என்கிறார் மாணவர் நவநீதகிருஷ்ணன். அதில் இடம் பெற்றுள்ள பிரமாண்ட கதாபாத்திரங்களை சினிமா மட்டும் அல்ல நிஜத்திலும் காட்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை உருவாக்கியதாகவும் மாணவர் தெரிவிக்கிறார்.
மாணவர்களுக்கு ஆறாவது விரலாக கலைத்திறனையும் வளர்த்து வரும் ஆசிரியர் உமாபதியின் செயலை பாராட்டிய அப்பள்ளி கணித ஆசிரியர் ரெக்ஸ் எதிர் காலத்தில் இந்த மாணவர்கள் தங்களது சொந்த காலில் நிற்க முடியும் என்பதை சாதித்து காட்டியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கிறார். மாணவர்களின் கலை திறமையை பாராட்டும் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களின் கலைப்படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.
பல ஆயிரம் ரூபாய்கள் செலவிட்டு நலன்விரும்பிகளுக்கு பரிசளிக்கும் பொருட்களை விட பிஞ்சுக்கைகளில் உருவாகும் காலை பொருட்கள் விலைமதிப்பற்றது என்றும் அதனை கலைஞர்களும், தொழில் வல்லுனர்களும் வாங்கி ஊக்குவிக்கவேண்டும் என்றும் கூறுகின்றனர்.