பொதுமக்கள் சேவையை நிறைவேற்ற தவறியமைக்காக அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒருபோதும் காரணங்களை முன்வைக்கக்கூடாதென ஜனாதிபதி வலிறுயுறுத்தினார்

அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பொதுமக்கள் சேவையை நிறைவேற்றத் தவறியமைக்காக அரச உத்தியோகத்தர்கள் ஒருபோதும் காரணங்களை முன்வைக்கக்கூடாதென்றும் தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே சட்டங்கள் மற்றும் சட்டக்கோவைகளை கேடயமாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பதுளை மாவட்டச் செயலகத்தில் நேற்று (15) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது-

இப்பகுதிகளில் உள்ள பைனஸ் மரங்களை அகற்றுவதற்கு முன்னர் அது தொடர்பிலான விஞ்ஞானபூர்வமான அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். ஆங்கிலேயர்கள் இந்நாட்டை ஆட்சி செய்த காலத்தில் பைனஸ் பயிர்ச்செய்கை இருக்கும்போதே தான் தேயிலையையும் பயிரிட்டனர். எனவே தவறான கருத்துக்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள். இதனால் பைனஸ் பயிர்ச்செய்கையை அகற்றுவதற்கு முன்னர் இது நீரேந்துப் பிரதேசங்களைப் பாதிக்கிறதா என்பது தொடர்பில் விஞ்ஞானபூர்வமாக ஆராய்தல் வேண்டும்.

பைனஸ் பயிர்ச்செய்கையை நீக்கிவிட்டு டர்பன்டைன் பயிர்ச்செய்கையில் எதற்காக ஈடுபட்டீர்கள். டர்பைன்டைன் பயிர்ச்செய்கைக் காரணமாக நீரேந்துப் பிரதேசங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக இருந்தால் அப்பயிர்ச்செய்கையை நீக்கிவிடுங்கள்.

அரச அதிகாரிகள் திறமையாக செயல்பட வேண்டும். எனக்கு காரணங்கள் தேவையில்லை. அரச திணைக்களங்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட வழியில்லை. அரசாங்கம் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

பெருந்தோட்டத் துறையில் சில அதிகாரிகள் சட்டக் கோவைகளை கேடயமாக வைத்துக்கொண்டு செயற்படுகின்றனர். 80 களில் இந்தச் சட்டத்தை தயாரிக்கும் போது இது குறித்து நான் கவனம் செலுத்தினேன்.

இப்பிரதேசத்திலுள்ள கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியபோது, ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக குறிப்பிடப்பட்டது. ஆசிரியர் நியமனங்களைப் பெற்று, ஓரிரு ஆண்டுகளில் அவர்கள் இடமாற்றங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். எனவே நியமனம் பெற்று ஐந்து வருடங்களுக்கு இடமாற்றங்களை வழங்காமை தொடர்பில் கல்வியமைச்சும் மாகாண சபையும் இணைந்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு புதிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு அதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பதுளை மாவட்டத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக மஹியங்கனை பிரதேச வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதேபோன்று, கிராதுருக்கோட்டையில் உள்ள சிறுநீரக மருத்துவமனையின் செலவுக்காக நிதியைஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தியத்தலாவை ஆதார வைத்தியசாலை காரணமாக பண்டாரவளை வைத்தியசாலையின் அபிவிருத்தியில் பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் நாம் ஆராய்வோம்.

பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக மாற்றுவதற்கான பணிகள் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படும். அச்சந்தர்ப்பத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.

பதுளை பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளுக்கு அவசியமான அனைத்து காணிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. இதன் எதிர்கால செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

நமது நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டதனால், வெளிநாட்டு நன்கொடைகள் கிடைப்பது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பதுளை பொது வைத்தியசாலைக்கு அவசியமான உபகரணங்களைப் பெற்றக்கொள்வதற்கு அவசியமான பணத்தை வழங்குவதில் சற்று காலதாமதம் ஏற்படலாம்.

மேலும் இந்த வைத்தியசாலையில் சுற்றலாப் பயணிகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் நாம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம். அதன் மூலம் அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

கடந்த காலங்களில் பதுளை மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதனால் விடுபட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளை மீண்டும் செயற்படுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க இங்கு கருத்து தெரிவித்தார்.

மாவட்ட நீர்ப்பாசன அபிவிருத்தி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததுடன், இடது கரையின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அங்கு சுட்டிக்காட்டினார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரீன் பெர்னாண்டோ, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தசநாயக்க, தேனுக விதானகமகே, அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் வடிவேல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட மற்றும் மாவட்ட அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.