புதுடெல்லி: மாநிலங்கள் கடன் வாங்குவதற்கு புதிய நிபந்தனையை ஒன்றிய அரசு விதித்துள்ளது. இதன்படி, அடுத்த நிதியாண்டில் மாநிலங்கள் மின்துறை சீரமைப்புகளை மேற்கொண்டால் மட்டுமே, மாநில ஜிடிபியில் 3.5 சதவீதம் கடன் வாங்க முடியும். இல்லாவிட்டால் 3 சதவீதம் மட்டுமே கடன் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15வது நிதி கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடன் வரம்பை அதிகரிக்க கோரியும் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, மின்துறை சீரமைப்புகளை மேற்கொள்ள நிர்ப்பந்திப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 வாரங்களுக்கு முன்பு, பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்களின் ஒரு பகுதியாக மாநில நிதியமைச்சர்களுடன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும். தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான ரூ.11,185 கோடியை விடுவிக்கவேண்டும் என கோரினார். இதுபோல் பல்வேறு மாநிலங்கள் கோரிக்கைகளை முன்வைத்தன.
இதில் குறிப்பாக, தமிழகம், பீகார் உள்ளிட்ட மாநில நிதியமைச்சர்கள், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வரம்பை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால், வரும் நிதியாண்டுக்கான கடன் வரம்பாக மாநில ஜிடிபியில் 3.5 சதவீதத்தை மட்டுமே ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. மாநிலங்கள் மின்துறையில் சீரமைப்புகளை மேற்கொண்டால் மட்டுமே கூடுதலாக 0.5 சதவீதம் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதனையும் சேர்த்துதான் மேற்கண்ட 3.5 சதவீத கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள மாநில அரசுகள் முன்வராவிட்டால், 3 சதவீதம்தான் கடன் பெற முடியும் என்ற நிலை இதன்மூலம் ஏற்பட்டுள்ளது.
2021-22 நிதியாண்டு தொடங்கி, முதல் 2024-25 வரையிலான முதல் 4 ஆண்டுகளில் மாநில அரசுகள் நிர்ணயித்த வரம்புக்கு கீழ் கடன் வாங்கியிருந்தால், எஞ்சிய வரம்பை அடுத்த நிதியாண்டுகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் சலுகை 2025-26 நிதியாண்டுடன் முடிந்து விடும். மேற்கண்ட கடன் வரம்பில் 0.5 சதவீதம் என்பது மின்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களான இயக்க செலவுகள், வருவாய் பற்றாக்குறை, நேரடி மானியம் உள்ளிட்டவை அடங்கும்.
எனவே, இந்த மறு சீரமைப்புகள் மேற்கொள்ளாத மாநிலங்கள் மாநில ஜிடிபியில் 3% மட்டுமே கடன் பெற முடியும்.
பல்வேறு திட்டங்களுக்கு நிதியை எதிர்பார்த்துள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, 15வது நிதிக்கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றிய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் திட்டத்தை ஏற்றால், மக்கள் மீது சுமையை ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏற்கனவே ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி உயர்வால் மக்கள் சிரமபப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் மேலும் சீர்திருத்தம் என்ற பெயரில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மேலும் பல இன்னல்களுக்கு மக்கள் ஆளாக நேரிடும் என்று கூறப்படுகிறது.
மேலும், மாநிலங்களுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்காக 2021-22ல் மாநில ஜிடிபியில் 4.5 சதவீதம் என நிதிக்கமிஷன் இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்தடுத்த நிதியாண்டுகளுக்கு இது 2022-23 4 சதவீதம், 2023-24ல் 3.5 சதவீதம், 2024-25ல் 3.5 சதவீதம், 2025-26ல் 3 சதவீதம் என நிர்ணயித்துள்ளது. ஆனால், 2009-10, 2015-16 மற்றும் 2016-17 தவிர பிற நிதியாண்டுகளில் மாநிலங்கள் பற்றாக்குறையை வரம்புக்குள்தான் வைத்துள்ளன எனவும் கூறப்படுகிறது. மின்துறையில் சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடுதலாக கடன் பெறுவதற்கு மாநில அரசுகளை அனுமதிக்கும் திட்டம் ஒன்றை கடந்த ஜூன் 2021ல் ஒன்றிய நிதியமைச்சகம் தொடங்கியது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு ஆர்இசி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 0.5 சதவீதம் மின்துறை திட்டங்களுக்கு கூடுதல் கடன் பெறுவதற்கான வரம்பாக அனுமதிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் மின்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள உறுதி அளிக்கும் மாநிலங்களுக்கு, கடன் பெறும் தொகையின் அளவு ரூ.80 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டதாக, கடந்த ஜனவரி மாதம் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
* மின்துறையில் சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடுதலாக கடன் பெறுவதற்கு மாநில அரசுகளை அனுமதிக்கும் திட்டம் ஒன்றை ஒன்றிய அரசு தொடங்கியது.
* இந்தத் திட்டத்தின் கீழ் மின்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள உறுதி அளிக்கும் மாநிலங்களுக்கு கடன் தொகை உயர்த்தப்படும் என நிபந்தனை விதித்தது.
* வரும் நிதியாண்டில், மேற்கண்ட நிபந்தனையை ஏற்கும் மாநிலங்கள் மட்டுமே, மாநில ஜிடிபியில் 3.5 சதவீதம் கடன் பெற முடியும்.