புதுடெல்லி: மும்பையிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடி விமான சேவையை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த ஜனவரி மாதம் வாங்கியது. இதையடுத்து, ஏர் இந்தியா விமான சேவை மற்றும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மும்பையில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடி விமான சேவையை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தொடங்கி வைத்தார். இந்தசேவை வாரத்துக்கு 3 முறைவழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவையை தொடங்கிவைத்த பின்னர் அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறும்போது, “மாற்றம் மற்றும் வளர்ச்சியின் சிகரமாக விமான போக்குவரத்துத் துறை விளங்குகிறது. இதை மேலும் வேகமாக, வலுவாக உந்தித் தள்ள வேண்டும்” என்றார்.
ஏர் இந்தியா தலைமைச் செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் கடந்த மாதம் கூறும்போது, “உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையில் ஏர் இந்தியாவின் பங்கை 30 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ